search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
    X

    மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

    • கோவில் தலைமை பூசாரி முதன்முதலாக குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.
    • நாளை மாவிளக்கு பூஜை, பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையான கடந்த 19-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் குண்டம் விழா தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராமசாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 24-ந் தேதி காலை திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று காலை நடந்தது.

    முன்னதாக நேற்று மாலை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. 36 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட குண்டத்தில் விறகுகள் போடப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது.

    இன்று காலை பவானி ஆற்றங்கரையில் இருந்து கோவிலுக்கு அம்மன் அழைப்பு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகன தேரில் அழைத்து வரப்பட்ட அம்மன் கத்திரிப்பூ நிற பட்டுத்தி காட்சி அளித்தார். திருக்குண்டத்தின் முன்பு அம்மன் எழுந்தருளி பக்தர்கள் முன் அருள்பாலித்தார்.

    இதையடுத்து கோவில் தலைமை பூசாரி ரகுபதி பூ குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து எலுமிச்சைப்பழம், பூ பந்துகளை குண்டத்தில் உருட்டினார். பின்னர் அவர் முதன்முதலாக குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார், அவரை தொடர்ந்து பூக்கூடை மற்றும் அம்மன் கரகத்தை சுமந்து வந்தவர்கள் குண்டம் இறங்கினர்.

    ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஒரு சிலர் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்காக நேற்று இரவு முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். அதிகாலையே நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் அந்த கிராமம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300-க்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பவானி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் 4 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவத்துறை சார்பாக தனியார் மற்றும் அரசு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பாக கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மேட்டுப்பா ளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ கே.செல்வராஜ், முன்னாள் கோவை மேயர் செ.ம. வேலுச்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    குண்டம் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாவிளக்கு பூஜை, பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    Next Story
    ×