search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது
    X

    திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்ததையும், இதில் கலந்துகொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

    காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது

    • பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
    • நாளை அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித்திருவிழா நேற்றுமுன்தினம் மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 7 மணிக்கு காரைக்கால் அம்மையாராகிய புனிதவதியார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டப வரும் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், திருமுருகன், கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அம்மையாரின் மாங்கனி அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பிச்சாண்டவர் வீதி உலா புறப்பாடு, மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் தலைமையில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×