search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா: மாம்பழங்களை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா: மாம்பழங்களை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    • மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.
    • பக்தர்கள் மீது இவ்வாறு இறைக்கும் மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்துவரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 30-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 3-ம் நாளான நேற்று காலை பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு பரமதத்த செட்டியார் காசுக்கடை மண்டபத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு இரு வர்த்தகர்கள் செட்டியாரிடம் இரு மாங்கனிகளை கொடுக்கும் நிகழ்ச்சியும், செட்டியார் அந்த இரு மாங்கனிகளையும் தம் இல்லத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் (சப்பரம்) பத்மாசனத்தில் அமர்ந்து வேதபாராயணத்துடன், வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு வீட்டு வாசல், வீட்டுமாடி மற்றும் சாலையின் இரு புறங்களிலிருந்தும் மாங்கனிகளை பக்தர்கள் மீது வாரி, வாரி இறைத்தனர். இந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.

    பக்தர்கள் மீது இவ்வாறு இறைக்கும் மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை கைகளில் பிடித்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து பவழக்கால் சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடைந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி மற்றும் வீதி உலா நடைபெறுகிறது.

    Next Story
    ×