search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன்
    X

    கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன்

    • கோவையே கோனியம்மன், கோனியம்மனே கோவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.
    • கோவில் என்பது தலைவன் உறைவிடம் என்று பொருள்படும்.

    கிராம மக்களாகிய உழவர்கள், தம்மையும் தமது சொத்தாகிய கால்நடையையும் பாதிக்கும் நோய் நொடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், தமது பயிர் செழித்து விளைய வேண்டியும் தெய்வத்தை வழிபடுவார்கள். அவர்கள் வழிபடும் தெய்வம் பெரும்பாலும் கிராம தேவதையாக அமைந்து இருக்கும் அந்த கிராம தேவதை அக்கிராமத்தாரின் நல்வாழ்வினைப் பேணி அருள்வதாக விளங்கும். கிராம மக்களின் நல்வாழ்க்கை பல வகையிலும் சிறந்து விளங்குவதற்கு கிராம தேவதை வழிபாடே காரணமாகும்.

    அவ்வாறு கிராம தேவதையாக அமைந்து விளங்கும் தெய்வங்களுள் மாரியம்மன், காளியம்மன் குறிப்பிடத்தக்கவையாகும். அக்கிராம தேவதைகளுள் கோவையின் காவல் தெய்வமாக திகழ்கின்ற கோனியம்மனும் ஓர் ஒப்பற்ற தெய்வம் ஆகும். மாரியம்மனும், காளியம்மனும் பல கிராமங்களில் திருக்கோவில் கொண்டு விளங்கக் காணலாம். ஆனால் அன்னை கோனியம்மன் கோவையம்பதியில் மட்டுமே திருக்கோவில் கொண்டு எழுந்தருளி திருக்காட்சி அருளுகின்றாள்.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், கொங்கு நாட்டின் பெருநகராகவும் விளங்குகின்ற கோவை மாநகரம், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அக்காட்டினிடையே இருளர் இன மக்கள் வாழ்ந்த ஒரு சிறு கிராமமும் இருந்தது.

    அக்கிராமத்தில் வாழ்ந்த இருளர் தலைவனாக கோவன் என்பவன் இருந்தான். அவன் பெயராலேயே அந்தக் கிராமம் கோவன் புதூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிறகு அது நாளடைவில் மருவி தற்போது கோயம்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

    இருளர் தலைவனாகிய கோவன், தன் கிராமத்தில் ஒரு சிறு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லை நாட்டிக் கோனியம்மன் என்னும் பெயரால் வழிபட்டான். கிராமத்தவராகிய மற்றவர்களும் அத்தெய்வத்தை வழிபட்டு வந்தனர்.

    கல் வடிவில் விளங்கிய கோனியம்மனும் அவர்கள் வாழ்வினை வளமுறச் செய்தாள். அதோடு, அந்த கிராம தேவதையாக, அக்கிராமத்தின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தாள்.

    பல்லாண்டுகளுக்கு பின்னர் கோசர் மரபினர் கொங்கு நாட்டை ஆண்டனர். அக்கொங் கிளங்கோசர், ஒரு மண் கோட்டையையும், ஓர் ஊரையும் அமைத்தனர். அக்கோட்டையின் காவல் தெய்வமாகக் கோனியம்மனைக் கோவில் கட்டி எழுந்தருளச் செய்தனர். கோசரால் அமைக்கப் பெற்ற ஊர் ஒரு நகரமாகும். குக்கிராமமாக இருந்த ஊர் நகரமாக மாறியதற்கு அன்னை கோனியம்மனின் திருவருளே காரணமாகும். கிராமமாக இருந்த கோவன்புதூர், இன்று முக்கிய பெரிய நகரமாக விளங்க அருள் செய்து விளங்குபவள் கோனியம்மன்.

    கோவை நகர மக்களும், கோனியம்மனையே முக்கிய தெய்வமாகவும், தலைமைத் தெய்வமாகவும் கொண்டு போற்றி வழிபட்டு வருகின்றனர். எனவேதான் கோவையே கோனியம்மன், கோனியம்மனே கோவை என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

    கோவில் என்பது தலைவன் உறைவிடம் என்று பொருள்படும். உலகுக்கு எல்லாம், உயிர்களுக்கு எல்லாம் தலைவனாக உள்ள இறைவனின் உறைவிடம் கோவில். அந்த இறைவனுக்குக் கோன் என்ற பெயரும் உண்டு. தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு தேவர்கோன் என்ற பெயர் அமைந்தது போன்று தேவ தேவனாகிய, மகாதேவனாகிய இறைவனுக்கும் கோன் என்று அமைந்தது.

    கோன் என்ற சொல்லிற்கு அரசன் என்றும் பொருள் உண்டு. அரசன் என்றால், உலகின் காவலன், நாயகன், தலைவன் என்று அர்த்தமாகும்.

    கோன் என்பது அரசனைக் குறிப்பது போன்றே கோனி என்பது அரசியைக் குறிக்கும். அன்னை பராசக்தி உலகிற்கு அரசி. இறைவன் உலகிற்கு அரசனாக விளங்கும்போது, இறைவி உலகிற்கு அரசியாக விளங்க வேண்டியதுதானே முறை. எனவே, கோவையில் காட்சி தரும் கோனியம்மன் உலக அரசியாக, உலக அரசர்கள் எல்லாம் வழிபடும் உத்தம அரசியாக திகழ்கின்றாள்.

    அரசியானவள் நகரின் நடுநாயகமாக விளங்க வேண்டியதற்கேற்ப, கோனியம்மன் திருக்கோவில் கோவை மாநகரின் நடுநாயகமாக அமைந்து விளங்குகின்றது. தனக்கு மேல் ஓர் அரசியில்லாத தனிப் பேரரசியாக கோனியம்மன் திகழ்கிறாள்.

    அரசியிடம் விளங்க வேண்டிய அன்பு, அறிவு, கருணை ஆகியவற்றின் திருவுருவாகத் திருக்கோவிலுள் உயரிய பீடம் மீது எழுந்தருளி வீற்றிருக்கின்றாள். கருணைப் பெருக்கும், திருமுக மண்டலமும், அன்பு தவழும் புன்னகையும், அருள் சுரக்கும் நயனங்களும் கொண்ட அட்டபுயநாயகியாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள்.

    வலது திருக்காலை மடக்கி உயர்த்தி பீடத்தின் மீது வைத்தும், இடது திருக்காலால் அசுரன் ஒருவனை மிதித்தும் மங்கல நாயகியாக கோனியம்மன் பொலிவுறுகின்றாள். அரசர்க்கரசியாக, கோவைக்கு அரசியாக, காவல் தெய்வமாக, கண்கண்ட தெய்வமாக விளங்குகின்ற கோனியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா சீரும் சிறப்புமாக நடைபெறும்.

    என்றாலும் இத்தலத்தில் மாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழாவாகிய பிரம்மோற்சவம் மிகவும் விசேஷமானதாகும். ஆண்டு தோறும் மாசி மாதம் வளர்பிறையில் அன்னையின் தேர்த் திருவிழா அருள் மணக்கும் வகையில் அழகாக நடைபெற்று வருகின்றது. அப்போது கோவையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கோனியம்மனை தரிசித்து அருள் பெறுவார்கள்.

    Next Story
    ×