search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்: திரளானவர்கள் பங்கேற்பு
    X

    ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்: திரளானவர்கள் பங்கேற்பு

    • 4-ந்தேதி பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.
    • 5-ந்தேதி ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி நடந்தது.

    தொடர்ந்து பரிசுத்த அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில், ஆலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர் பெரியவர்கள் ஆலயத்தில் இருந்து எடுத்து வந்தனர்.

    பின்னர் புனித கொடியை ஆயர் ஜெபம் செய்து அர்ச்சித்தவுடன், தர்மகர்த்தா ஆலய கொடிமரத்தில் கொடியேற்றினார். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஜெபமாலை வடிவிலான பலூனும் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து ஆயர் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது.

    விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம், குருவானவர்கள் ஜெகதீஷ், பீட்டர் பாஸ்டின், ரூபன், நெல்சன் பால்ராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் நற்கருணை ஆசீர், மறையுரை நடக்கிறது. 7-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) மாதா காட்சி கொடுத்த மலைக்கெபியில் திருப்பலி நடக்கிறது. 8-ம் திருநாளான 3-ந்தேதி (வியாழக்கிழமை) காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில், மாணவ- மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது.

    9-ம் திருநாளான 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாள திருப்பலி, இரவு 12 மணிக்கு தமிழ் திருப்பலியை தொடர்ந்து பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான 5-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில், பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, உதவி பங்குத்தந்தை ஜான் ரோஸ், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×