என் மலர்

  வழிபாடு

  இறைவனின் நேசத்தைப்பெற அழகான நன்மைகள் செய்வோம்
  X

  இறைவனின் நேசத்தைப்பெற அழகான நன்மைகள் செய்வோம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாம் அனைவரும் அழகிய நன்மைகளை செய்வோம், அல்லாஹ்வின் நேசத்தைப்பெறுவோம்.
  • ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை என்ற நிலையில் தான் மனித வாழ்வு அமைந்துள்ளது.

  ஏக இறைவன் அல்லாஹ்வின் படைப்பிலே சிறந்த படைப்புகளில் ஒன்றாக மனித இனம் திகழ்கிறது. அதே நேரத்தில் இந்த உலக வாழ்வு ஒரு சோதனைக் களமாகவே மனிதனுக்கு அமைந்துள்ளது.

  பல்வேறு வகையான இன்பங்கள், சுகங்கள், துக்கங்கள், சோதனைகள் என்று அனைத்து வகையிலும் இம்மை வாழ்க்கையில் மனிதன் சோதிக்கப்படுகின்றான்.

  பணம் இருப்பவருக்கு உடல் நலம் இருப்பதில்லை. வசதியானவருக்கு பிறருக்கு கொடுக்கும் மனம் வருவதில்லை. கோடிகளில் புரண்டாலும் மனித மனம் ஆசையின் பின்னோக்கித்தான் பயணிக்கிறது. அதேபோல வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், இருப்பதைக்கொண்டு திருப்தியாக வாழ்வோம் என்ற எண்ணம் கொண்ட மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  ஒன்றிருந்தால் இன்னொன்று இல்லை என்ற நிலையில் தான் மனித வாழ்வு அமைந்துள்ளது. இதனால் மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களிடம் இருப்பதைக்கொண்டு மன நிறைவு காணாமல் இல்லாத ஒன்றைத்தேடி அலைகிறார்கள். அவர்கள், தங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனை நினைக்க மறந்து விடுகிறார்கள்.

  உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் கட்டுப்பாட்டில் இருப்பதை மக்கள் எளிதில் மறந்துவிடுகிறார்கள். இறைவனின் அருளால் தான் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கின்றது என்பதை உணராமல் தங்களது அறிவால், முயற்சியால் மற்றும் பிற செயல்களால் தான் எல்லாம் கிடைத்தது, கிடைக்கின்றது என்று அறியாமையுடன் இருக்கிறார்கள். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

  "வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அவனைத் தவிர வேறு எந்தப் பாதுகாவலனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா?" (திருக்குர்ஆன் 2:107)

  "இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் - இதுதான் தெளிவான நஷ்டமாகும்". (திருக்குர்ஆன் 22:11)

  உலக வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் அல்ல. ஒவ்வொரு உயிரினமும் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை அடைந்தே தீரும். இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. வாழும் காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம், நமது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதற்கு ஏற்பவே நாம் நினைவுகூரப்படுவோம். அப்படி வாழ்ந்ததால் தான் இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றளவும் உலக மக்களால் சிறந்த முறையில் நினைவு கூரப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றி வாழுவதே சிறந்த உலக வாழ்க்கை.

  மனித வாழ்க்கையில் வரும் இன்பங்கள் மட்டுமல்ல, சோதனைகளும் இறைவனால் தான் அனுப்பப்படுகிறது. இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன் இறையச்சத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மனிதன் சோதிக்கப்படுகின்றான். இறைவனின் இந்த சோதனைகள் குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

  "நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்". (திருக்குர்ஆன் 8:28).

  இறையச்சத்துடன் ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

  "இறையச்சம் உள்ளவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர, கோபத்தை அடக்கிக்கொள்ளக்கூடியவர்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிக்கக் கூடியவர்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:134)

  நாம் அனைவரும் அழகிய நன்மைகளை செய்வோம், அல்லாஹ்வின் நேசத்தைப்பெறுவோம்.

  பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.

  Next Story
  ×