search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று அதிகாலை விமரிசையாக நடந்தது ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்
    X

    இன்று அதிகாலை விமரிசையாக நடந்தது ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்

    • ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.
    • 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அல் குத்பு சுல்த்தான் செய்யது பாதுஷா நாயகம் ஷஹீது ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களின் தர்காவில் கடந்த மாதம் மே 21-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை யானை, 21 குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்கா வந்தடைந்தது. தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், நவாஸ் கனி எம்.பி., மாவட்ட பா.ஜனதா தலைவர் தரணி முருகேசன் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். காலை 6 மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது.

    தற்போது தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர். முன்ன தாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    மதுரை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற 19-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×