search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சித்திரை விசு திருநாளில் புதுமாப்பிள்ளைக்கு கவுரவம்
    X

    சித்திரை விசு திருநாளில் புதுமாப்பிள்ளைக்கு கவுரவம்

    • மணமகன் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பண்டங்களை வாங்கிக் கொடுப்பார்கள்.
    • அழகாக உடை அணிந்து கம்பீரமாக ஹீரோவாக மணமகன் வலம் வருவார்.

    தமிழ் புத்தாண்டான சித்திரை 1-ந் தேதி சித்திரை விசு விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அகத்தியருக்கு சிவபெருமான் பாபநாசத்தில் தனது திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்து வருகிறது.

    அதாவது, சிவபெருமானின் திருமணம் கயிலாயத்தில் நடந்தபோது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதனால் நிலைகுலைந்த தேவர்கள் உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர். அவர் அகத்திய முனிவரை அழைத்து, 'நீ தென் திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்து' என்று கேட்டுக்கொண்டார்.

    உடனே அகத்தியர் பணிந்து வணங்கி, "ஈஸ்வரா, தங்கள் திருமணக்கோலத்தை தரிசிக்க இந்த இடத்தில் முனிவர்களும், ரிஷிகளும் கூடி நிற்க, எனக்கு இந்த பாக்கியம் கிடையாதா?" என்று மன வேதனையுடன் கேட்டார்.

    அதற்கு சிவபெருமான், "தென் திசையில் பொதிகை மலையில் நான் உனக்கு திருமண கோலத்தில் காட்சி தருவேன்" என்று சொல்லி அனுப்பினார்.

    அதன்படி தென் திசை வந்த அகத்தியருக்கு சித்திரை மாதம் 1-ந் தேதி பொதிகை மலையில் சிவபெருமான், பார்வதி தேவியுடன், திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார். அப்போது வானத்திலிருந்து மஞ்சள் மழை பொழிந்தது. இந்தக் காட்சியை நினைவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பாபநாசத்தில் உள்ள பாபநாசநாதர்-உலகம்மன் கோவிலில் சித்திரை விசு திருவிழா நடைபெறும்.

    இதன் சிகர நிகழ்ச்சியாக சித்திரை மாதம் 1-ந் தேதி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதன் பின்னர் சுவாமி-அம்பாள் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்று, கோவிலில் பின்புறத்தில் வைத்து அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளிப்பார்கள். திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த திருமணக் காட்சியை கண்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    திருமணம் முடிந்த புதுமண தம்பதியர்கள் வந்து தாமிரபரணியில் தீர்த்தமாடி, சிவபெருமானை வழிபட்டு, அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய திருமண காட்சியை கண்டால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற இந்த திருமணக்காட்சியை புதிதாக திருமணமான தம்பதியர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் புதிதாக திருமணமான புதுமாப்பிள்ளை-பெண்ணை, பெண் வீட்டார் 'சித்திரை தீர்த்தம்' என்று அழைக்கப்படும் இந்த சித்திரை விசு விழாவிற்கு பாபநாசம், பாபநாசநாதர் உலகம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து தாமிரபரணி நதியில் தீர்த்தமாட செய்வார்கள். அதன்பின் புதுமண தம்பதியர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு தெப்ப உற்சவம் பார்ப்பார்கள். பின்னர் அகத்தியருக்கு, சிவபெருமான் காட்சியளிக்கும் திருமணக் கோலத்தில் சிவபெருமானையும், அகத்தியரையும் வழிபட்டுச் செல்வார்கள்.

    இப்படி சித்திரை விசுவுக்கு வருகின்ற புதுமாப்பிள்ளையை, மணமகளின் தந்தை மற்றும் சகோதரர்கள் அழைத்து வருவார்கள்.

    இந்த விழாவில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும். புதுமண தம்பதியருக்கு பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை, பெண்ணிற்கு குடை, செருப்பு மற்றும் வீட்டிற்கு தேவையான டார்ச் லைட், சமையல் உபகரண பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொடுப்பார்கள். மேலும் மாப்பிள்ளை வீட்டில் உள்ள அவருடைய பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கும், அவருடைய குழந்தை களுக்கும் தேவையான தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து விருந்து வைத்து சந்தோஷமாக அனுப்பி வைப்பார்கள்.

    இதுகுறித்து முதியவர் ஒருவர் கூறியதாவது:-

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலும் வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் தான் அதிக அளவில் திருமணம் நடைபெறும். திருமணம் முடிந்தவுடன் கோவில், குளம் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

    ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் திருமணம் ஆன தம்பதிகள் சித்திரை விசு அன்று பாபநாசம் கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தம் ஆடி இறைவனை வழிபட்ட பின்னர் அவர்களுடைய குடும்பத்திற்கு தேவையான பொருட்களை பெண் வீட்டார் வாங்கிக் கொடுப்பார்கள்.

    அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக இருந்ததால் குடை, டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் ஒன்று மட்டும் தான் இருக்கும். அதை மூத்தவர்கள் பயன்படுத்தி வருவார்கள். புதிதாக திருமணமான தம்பதியர் அதை பயன்படுத்துவதற்கு அவர்களிடம் கேட்க வேண்டும். அது மூத்த அண்ணன் மனைவி வீட்டில் இருந்து வந்ததாக இருக்கும். அவர்களிடம் கேட்பதற்கு புதிய தம்பதியருக்கு கவுரவ குறைச்சலாக தெரியும். இதனால் தான் பெண் வீட்டார் தனது மகளை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காக மணமகனுக்கு செருப்பு, குடை, டார்ச் லைட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள்.

    அதேபோல் மணமகன் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பண்டங்களை வாங்கிக் கொடுப்பார்கள். புது மாப்பிள்ளை அன்று தனது சொந்த செலவில் தனது மனைவியின் சகோதர, சகோதரிகளுக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அவர்கள் கேட்கிற பொருட்களை வாங்கிக் கொடுப்பார்.

    அழகாக உடை அணிந்து மிகவும் கம்பீரமாக ஹீரோவாக அன்று வலம் வருவார். அவரிடம் அன்று எது கேட்டாலும் அவர் வாங்கிக்கொடுப்பார். அந்த அளவிற்கு இந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×