search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆவணி மூல திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த சுந்தரேசுவரர்
    X

    ஆவணி மூல திருவிழா: தருமிக்கு பொற்கிழி அளித்த சுந்தரேசுவரர்

    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது.
    • விழாவின் 4-ம் நாளில் தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறப்பு அலங்காரங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன. விழாவின் 4-ம் நாளான நேற்று தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    முன்பு மதுரையை சூடாமணி பாண்டியன் (செண்பகப்பாண்டியன்) என்ற மன்னன் ஆட்சி செய்தான்.

    இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்பக மரங்களை தன் நந்தவனத்தில் வளர்த்து வந்தான். இளவேனிற் காலத்தில் அரசி அங்கிருக்கும் போது அந்த நந்தவனத்திலே உன்னதமான ஒரு புதிய வாசனையை மன்னன் உணர்ந்தான். அது தன் தேவியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்த அவன் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டான்.

    தன் ஐயத்தை நீக்குபவருக்கு ஆயிரம் பொன் பரிசாக கொடுக்கப்படும் என்று கூறி அதனை சங்க மண்டபத்தில் தொங்க விட்டான். பல புலவர்கள் தங்கள் மனதில் தோன்றியதை பாடினார்கள். ஆனால் அரசனின் ஐயம் தீரவில்லை.

    இந்த நிலையில் தருமி என்ற ஒருவன் சொக்கநாதரை பூஜிக்க விரும்பினான். ஆனால் மணமான பிறகே சிவனை பூஜிக்கலாம் என்பதால் அரசன் அறிவித்த பரிசு தனக்கு கிடைத்தால் அதன் மூலம் தானும் மணம் புரிந்து, இறைப்பணி செய்யலாம் என்று கருதி இறைவனை வேண்டினான்.

    அவனது வேண்டுகோளை ஏற்று இறைவன், "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழிஇய நட்பின் பயிலியற், செறியெயிற் றரிவை கூந்தலில், நறியவு முளதோ நீ அறியும் பூவே" என்ற பாடல் எழுதப்பட்ட ஓலையினை அவனுக்கு வழங்கினார்.

    தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட, அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி, அந்த பொற்கிழியை அவருக்கு அளிக்க உத்தரவிட்டான். அப்போது தலைமைப்புலவர் நக்கீரர் குறுக்கீட்டு தடுத்து நிறுத்தி, அந்த பாட்டில் பிழை உள்ளது என்று கூறினார். உடனே இறைவன் ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு வந்தார். அங்கு தன் பாடலில் என்ன குற்றம் என்று கேட்க, நக்கீரரும் பொருட்குற்றம் உள்ளது என்றார். இருவருக்குமிடையே வாக்குவாதம் தொடர இறுதியாக இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்ற அறிந்த பின்னரும் நக்கீரர், நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என வாதாட இறைவனின் நெற்றிக் கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரை குளத்தில் நக்கீரர் விழுந்தார். அதன்பின்னர் இறைவனும் மறைந்தார்.

    இவ்வாறு நக்கீரரின் தமிழ்ப்புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன் மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இறங்கி, பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரரை உயிர்ப்பித்து கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார் என்று புராணம் கூறுகிறது.

    Next Story
    ×