search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணகிரிநாதரும் சிறுவாபுரியும்
    X

    அருணகிரிநாதரும் சிறுவாபுரியும்

    • சிறுவாபுரி முருகனைப் போற்றி ஒரு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.
    • அருணகிரிநாத சுவாமிகள் பாடியது மொத்தம் 10,000 திருப்புகழ் பாடல்கள்.

    பழமையும், சிறப்பும் வாய்ந்த முருகனின் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அருணகிரிநாதர் முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். அருணகிரிநாத சுவாமிகள் பாடியது மொத்தம் 10,000 திருப்புகழ் பாடல்கள். அவர் வாழ்ந்த காலம் 15-ம் நூற்றாண்டு. அப்போது அவர் பாடிய 10,000 திருப்புகழ் பாடல்களில் இன்று நமக்குக் கிடைத்திருப்பதோ 1330 திருப்புகழ்தான். அவற்றை அருணகிரிநாதர் 224 தலங்களில் பாடியுள்ளார். அப்படி அவர் பாடிய 224 தலங்களில் 9 இடங்கள் எதுவென்றே இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டறியப்பட்ட 215 தலங்களில் 35 தலங்களைப் பற்றி சிறப்பாகப் பாடியுள்ளார்.

    "சிறுவாபுரி.... இந்த 35 தலங்களில் ஒன்றுதான். ஆனால்.. இந்த 35 தலங்களில் 8 தலங்களுக்கு மட்டுமே நான்கு திருப்புகழ் பாடியுள்ளார். அந்த 8 தலங்களில் ஒன்றுதான் சிறுவாபுரி. "பொதுவாக எல்லாத் திருப்புகழுமே, முருகனின் பெருமையை, அருமையைச் சொல்லும் பாடலாகும். ஆனால் அர்ச்சனைத் திருப்புகழ் என்பது, முருகனை வணங்கி வழிபடும் பாடலாகும். பழநி முருகனை போற்றி பாடப்பட்ட அர்ச்சனை திருப்புகழ்தான் 'நாதவிந்து கலாதி நமோ நம' என்ற பாடல். அதேபோல், சிறுவாபுரி முருகனைப் போற்றி ஒரு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.

    'சீதள வாரிஜ பாதா நமோ நம

    நாரத கீத விநோதா நமோ நம

    சேவல மா மாயில் ப்ரீதா நமோ நம... மறைதேடும்' என்று தொடரும் அர்ச்சனைத் திருப்புகழ், சிறுவாபுரி முருகனின் சிறப்பைச் சொல்லும்.

    சிறுவாபுரியில் வீற்றிருந்து அருள்செய்யும் கந்தக்கடவுளை, உள்ளார்ந்த பக்தியோடு நம் சிந்தையில் நிறுத்துவோம். நம் துயர்துடைத்து, நம்மை நலமோடும், சகல சவுபாக்கியங்களோடும் வாழ வைப்பான் கந்தன். இதைத்தான் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இப்படி பாடியுள்ளார்.

    'சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான

    தன் சிறுவை தனில் மேவு பெருமானே...'

    'சிறுவாபுரி முருகன், சிறப்பு வாய்ந்தவன் மட்டுமல்ல தன்னை நாடிவரும் பக்தருக்கெல்லாம் வரங்களை வாரிக் கொடுப்பவன். இதையும் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

    'வீறாகிலீ அளகாபுரி வாழ்வினும் மேலாக

    திருவாழ் சிறுவாபுரி வாழ்வே'

    குபேரபட்டிணம் என்று அழைக்கப்படும், இந்திரனின் அளகாபுரி நகரம் போல், எல்லா வளங்களும் மிக அதிகமாக நிறைந்துள்ள சிறுவாபுரியில் குடிகொண்டுள்ள முருகன், வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என்று அருணகிரிநாதர் சொல்வது, வரம் மிகுந்த சிறுவாபுரி முருகனை, அடிக்கடி நாடி வந்து, அவனிடம் இருப்பு உள்ள வரங்களைப் பெற்றுச் செல்ல வாருங்கள்.. வாருங்கள்... என்று அழைப்பது போல் உள்ளது.

    Next Story
    ×