search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அற்புதங்கள் நிறைந்த ஆடி அமாவாசை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அற்புதங்கள் நிறைந்த ஆடி அமாவாசை

    • பொதுவாக நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் 12 பேர்.
    • அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்..

    ஜோதிடத்தில் சூரியனை பிதுர்காரகன் என்பர். பிதுர் என்பது, தந்தையை குறிக்கும். சந்திரனை மாத்ருகாரகன் என்பர். மாத்ரு என்றால் தாய் என்று அர்த்தம். சூரியனும், சந்திரனும் அமாவாசைகளில்தான் சேரும். எனவே தந்தை மற்றும் தாய்க்குரிய கிரகம் ஒன்றாகக் கூடி வரும் நாளில், இவர்களை நினைப்பது பொருத்தமாக இருக்கும். அதனால்தான் அமாவாசையை முன்னோர் வழிபாட்டு நாளாக கருதுகின்றனர்.

    பிதுர்லோகம் எனப்படும் முன்னோர் உலகத்தில் இருப்பவர்களுக்கு, நாம் கொடுக்கும் தர்ப்பண பொருளான எள்ளும், நீரையும் சூரிய பகவானே அவர்களிடம் கொண்டு சேர்க்கிறார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

    இன்னொரு விசேஷ தகவல். செவ்வாய்க்கிழமையன்று அமாவாசை வருமானால், அதை பவுமாதி அமாவாசை என்பர். பவுமன் என்றால் செவ்வாய் என பொருள். செவ்வாயை பூமிகாரகன் என்பர்.

    இந்நாளில், நிலம் வாங்குவது சம்பந்தப்பட்ட பேச்சை ஆரம்பித்தல், கடனை அடைத்தல் ஆகிய பணிகளைச் செய்யலாம். இந்நாளில் கடன் தீர்க்கப்பட்டால், மீண்டும் கடன் தொல்லை வராது என்பர்.

    இவ்வாண்டு ஆடி அமாவாசை நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.55 மணிக்கே தொடங்கி விடுகிறது. இதில் இருந்து மாலை சூரியன் மறையும் நேரமான மாலை 6.33 மணிக்குள் மேற்கண்ட பணிகளைச் செய்யலாம். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை தர்ப்பணம் செய்யலாம்.

    அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் புனிதமானது. சந்திரனின் வீடான கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது நிகழும் அமாவாசை ஆடி அமாவாசை.

    இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பொதுவாக ஆடி அமாவாசை நாளில்தான் பித்ருக்கள் பூமியை நோக்கிய தம் பயணத்தை தொடங்குவர். எனவே ஆடி அமாவாசை தர்ப்பணம் என்பது பித்ருக்களைத் திருப்திப்படுத்தி, அவர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.

    பொதுவாக நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் 12 பேர். தந்தை வழியில் தந்தை, பாட்டனார், பாட்டனாரின் தகப்பனார், தாயார், தகப்பனாரின் தாயார் மற்றும் பாட்டனாரின் தாயார் ஆகிய அறுவருக்குத் தர்ப்பணம் வழங்க வேண்டும். அதே போல் தாய் வழியிலும் தாயாரின் தகப்பனார், தாயின் தகப்பனாரின் தகப்பனார், தாயின் பாட்டனாருக்குத் தகப்பனார், தாய்க்குத் தாய், தாய்ப் பாட்டனாருக்கு மனைவி, தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டி ஆகிய அறுவருக்கும் கட்டாயம் தர்ப்பணம் வழங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இவர்கள் தாய் தந்தையரின் இரண்டு தலைமுறை பித்ருக்கள். இவர்கள் தவிர சகாருணீகர்கள் எனப்படும் பங்காளிகள், உறவினர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

    அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன.

    அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன. அதிலும், ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் அத்தகைய சிறப்பான தினங்களாகும். நாளை மறுநாள் புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும். மேலும் நம்முடன் வாழ்ந்த, காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    ஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

    இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர். இறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன.

    எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம், ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

    மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்தபின், அன்னதானம் செய்வதும், மாற்றுத்திறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்டபின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் முன்னோர்களின் படங்கள் முன்னிலையில் அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து, வடை, பாயாசத்துடன் பெரிய அளவில் படையல்போட்டு வழிபடவேண்டும். அவரவர் குல வழக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசிகிட்டுவதுடன், வீட்டில் தீய சக்தி இருந்தால் அது விலகியோடும்.

    இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள். அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற , தடைகள் அகல , பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.

    அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும்..

    திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.

    இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது.

    பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல.. காய்கறிகள் தானமாக தரவேண்டும், குறிப்பாக பூசணிக்காய்.. ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும்.. அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள்.. முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும் அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

    மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

    எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.

    Next Story
    ×