search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

    • திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
    • கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷமானது. இன்று ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. தென்னகத்தின் காசி, திரிவேணி சங்கமம், திருநானா என பல்வேறு சிறப்புக்களுடன் அழைக்கப்படும் புகழ் பெற்ற பரிகார ஸ்தலமான பவானி கூடுதுறையில் பவானி, காவேரி மற்றும் அமிர்தநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் புராணங்களில் பாடப்பெற்ற சிவ ஸ்தலமாகும்.

    இந்த ஸ்தலத்தில் வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டால் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இதுபோல் பரிகாரங்கள் தோச நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்வதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறைக்கு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் பொதுமக்கள் வரத் தொடங்கினர்.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசையையொட்டி பக்தர்களுக்கு புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதே போல் பரிகாரம் பூஜை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜை செய்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே பவானி கூடுதுறையில் குவிய தொடங்கினர். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். மேலும் கோயில் வளாகம் மற்றும் கூடுதுறை பகுதியில் 72 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. 5 இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டது.

    கோவிலை சுற்றிலும் சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர். ஆண்கள் , பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. 15 -க்கும் மேற்பட்ட பரிசல்களில் நீச்சல் தெரிந்த உள்ளூர் மீனவர்கள், மற்றும் லைவ் ஜாக்கெட் அணிந்த பவானி தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்புக்காக தயார் நிலையில் இருந்தனர்.

    பெண்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் அணிந்து வர வேண்டாம் என போலீஸ் சார்பில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பரிகார பூஜைகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் திருமண தடை மற்றும் பல்வேறு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றங்கரையிலும் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவேரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.

    கொடுமுடி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆண்கள் பெண்கள் புனித நீராட தனித்தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். கருங்கல்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போல் காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளிலும் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதலே புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×