search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்த பொதுமக்கள்

    • அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
    • பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவபெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.

    அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தொலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி அமாவாசை என இரண்டும் இணைந்து வருகிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்த ஆடி மாதம் 2 அமாவாசை வருவதால் இன்று கூட்டம் குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பவானி சரக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

    மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடை யின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதே போல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழபட்டனர்.

    மேலும் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்களள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் வந்து தொடர்ந்து பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×