search icon
என் மலர்tooltip icon

  வழிபாடு

  நடராஜர்
  X
  நடராஜர்

  ஆன்மாவை மேம்படுத்தும் ஆனந்த நடனம்

  எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் அருள்புரிந்தாலும் சிதம்பரம் தலத்தில் அவர் நம் ஒவ்வொருவரின் ஆத்மாவையும் மேம்படுத்தும் இறைவனாகத் திகழ்கிறார்.
  தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் 274 கோவில்கள் பாடல் பெற்ற சிவத்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன.
  7, 8-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இந்த 274 ஆலயங்கள் பற்றியும், அங்கு குடி கொண்டுள்ள சிவபெருமான் பற்றியும் தேவாரப் பதிகங்கள் இயற்றியுள்ளனர். இந்த சிவதலங்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறப்புப் பெற்றவை.
  இந்த சிவதலங்களில் முதன்மையானது என்ற பெருமையை சிதம்பரம் நடராஜர் ஆலயம் பெற்றுள்ளது. பஞ்சப்பூத தலங்களில் சிதம்பரம் தலம் ஆகாய தலமாக உள்ளது.

  ஈசன் இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்த போது, முதலில் ஆகாயம்தான் தோன்றியது. அதன்பிறகே காற்று, நீர், நிலம், நெருப்பு தோன்றின. எனவே சிதம்பரம் முதல் தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. சிவவழிபாட்டை தொடங்குபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பார்கள். இது மட்டுமல்ல கோவில் என்றாலே அது சிதம்பரம் தலத்தைத்தான் குறிக்கும் என்பார்கள்.

  சிதம்பரம் என்றதும் நமக்கு நடராஜர் பளீரென நினைவுக்கு வருவார். ஒரு காலை தூக்கி நாட்டிய மாடும் நடராஜரின் உருவமேனி வித்தியாசமானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராதது. உலகை ஆளும் சிவபெருமான் 25 விதமான உருவ மேனியைக் கொண்டவர். இந்த உருவங்களில் முதன்மையாகக் கருதப்படுவது நடராஜர் வடிவமாகும். பக்தர்கள் அதிகம் விரும்புவதும் இந்த வடிவத்தைத்தான்.

  எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் அருள்புரிந்தாலும் சிதம்பரம் தலத்தில் அவர் நம் ஒவ்வொருவரின் ஆத்மாவையும் மேம்படுத்தும் இறைவனாகத் திகழ்கிறார். அதனால்தான் ‘‘சிதம்பரம் தரிசிக்க முக்தி’’ என்கிறார்கள்.

  சித் எனும் ஞானமும், அம்பரம் எனும் ஆகாசமும் இணைந்தே ‘‘ஞானாகாசம்’’ எனும் சிதம்பரம் ஆகியது. இத்தலத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடி உள்ளார். அவர் ஆடலால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று சிவனடியார்கள் கூறுகிறார்கள்.

  இதை உறுதிபடுத்துவது போல அமெரிக்க பெண் விஞ்ஞானி ஒருவரின் ஆய்வு முடிவு இருந்தது. இந்த உலகின் மையப்புள்ளி எது என்று அவர் கடும் ஆராய்ச்சிகள் செய்து முடித்த போது, அந்த மையப்புள்ளி சிதம்பரம் தலத்தில் கருவறையில் உள்ள நடராஜரின் காலடிக்குள் இருப்பது தெரிந்தது. இப்படி எண்ணற்ற ரகசியங்கள் சிதம்பரம் தலத்தில் புதைந்து கிடக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சிதம்பரம் ஆலயத்தின் ஒவ்வொரு அம்சமும் ரகசியம் நிறைந்ததாக உள்ளது.

  உலகத் தொழில் ஐந்தினையும் குறித்து உயர்ந்த தோற்றமே நடராஜரின் திருவுருவமாகும். சிவ பெருமான் ஆன்மாக்களின் இரு வினைகளையும் தாமே ஏற்று அவைகளைப் போக்கி, முத்தி அளிக்க வேண்டி தனு, கரண, புவன யோகங்களை அளித்துள்ளான். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்து தொழில்களையும் அப்பெருமான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறான். இந்த ஐந்து தொழில்களையும் உணர்த்துவதே நடராஜரின் திருவுருவமாகும். ஐந்தொழில் புரியும் நடனம் பஞ்ச கிருத்திய நடனம் என போற்றப்படுகிறது.

  நடராஜர் நான்கு திருக் கரங்களைக் கொண்டிருக்கிறார். ஒரு கரத்தில் தமருகமும், ஒரு கரத்தில் அனலும், ஏந்தி ஒரு கரம் அபயம் அளிக்க அதற்கு நேரான இடக்கரம் கீழ்நோக்கிச் சாய்ந்திருக்க வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி அவிர்சடையுடன் நடனம் ஆடுகிறார்.

  உலக உயிர்களின் தோற்றம் தமருக ஒலியில் உள்ளது. அபயமளிக்கும் கரம் காத்தல் தொழில் புரிகிறது. அனலேந்திய கரம் அழித்தல் தொழி லுக்கு உரியது. ஊன்றியுள்ள திருப்பாதம் மறைத் தலையும் உயர்த்திய திருப்பாதம் அருளையும் குறிக்கிறது. சிதம்பரம் சென்று வழிபடுகின்றவர்களுக்கு ஆனந்தமயமான வளமான பொன் பொருள் மிக்க வாழ்வு கிடைக்கும். வானோங்கும் புகழ் சேரும். மீண்டும் வந்து பிறவாத பேரின்ப முக்தியும் உண்டாகும். பசி பகை போன்றவை விலகும். மெய்ஞானம் உண்டாகும். எண்ணிய எண்ணம் ஈடேறும்.

  பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர். இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக் கூத்து காண விரும்பினார்கள். பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

  ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர். தில்லையம்பலத்தை பொன்னம் பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர். திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

  பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார். ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

  பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார். ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்தி பாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள். லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார். இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.
  Next Story
  ×