search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்
    X
    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்

    திருவானைக்காவல் கோவிலில் தீப, தூபங்கள் இல்லாமல் பள்ளியறை பூஜை பக்தர்கள் வேதனை

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தீப, தூபங்கள் இல்லாமல் பள்ளியறை பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.
    பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். அம்பிகை, சிவனை வழிபட காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்து வழிபட்டார். இதனால் இவர் ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் என்பது வரலாறு. அகிலம் ஆண்ட நாயகி அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம் திருவானைக்கோவில் ஆகும்.

    இக்கோவில், 18 ஏக்கர் நிலப்பரப்பளவில் நீண்ட உயரமான மதில்களும், நான்கு திசைகளில் கோபுரங்கள் மற்றும் ஐந்து பிரகாரங்கள் கொண்டது. அம்மன் அகிலாண்டேஸ்வரி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சன்னதியில் கிழக்கு நோக்கியவாது அகிலாண்டேஸ்வரி காட்சி தருகிறார். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள்பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளி உள்ளார்.

    இக்கோவிலில் தினந்தோறும் காலை, உச்சி, மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களிலும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரருக்கு தினமும் இரவு அர்த்தஜாம தீபாராதனை நடைபெறும். பின்னர் உற்சவர், சன்னதியில் இருந்து சொக்கர் பல்லக்கில் புறப்பட்டு சாமரம், தூபம், தீவட்டி, மேளதாளத்துடன் ஓதுவாருடன் அம்மன் சன்னதியை வந்தடைவார். அங்கு சொக்கரை பள்ளிஅறையில் எழுந்தருள செய்து வாசனை பூக்களால் அலங்கரித்து தூபம், தீபங்கள் காண்பிக்கப்பட்டு அப்பம், பால், பழம் கொண்டு நெய் வேத்தியம் நடைபெறும். பின்னர் பஞ்சஆரத்தியுடன் ஓதுவார் பாடலுடன் பள்ளியறை பூஜை நடைபெறும்.

    ஆனால், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமாகவும். அகிலம் ஆண்ட நாயகி அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமான இக்கோவிலில் தற்போது பள்ளிஅறையில் ஒரு சிறிய விளக்கு கூட இல்லாமலும் இருண்ட நிலையில் காணப்படுகின்றன. மேலும் தீப, தூபங்கள் கூட சரிவர காட்டப்படாமலும் பள்ளி அறை பூஜைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள், சிவனடியார்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பள்ளியறையில் சிறிய விளக்கு கூட ஏற்றப்படாமல் இருட்டறையிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமிகளுக்கு பஞ்ச தீபங்கள் காட்டப்படுவதில்லை.

    தற்போது இந்துசமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்நிலையில் இக்கோவிலில் பூஜைகள் முறைப்படி நடைபெறுகின்றனவா? என்பதை உரிய அதிகாரிகளை கொண்டு கண்காணித்து பூஜைகள் முறைப்படி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×