என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் ஜெகநாதபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளியபோது எடுத்தபடம்.
    X
    கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் ஜெகநாதபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளியபோது எடுத்தபடம்.

    நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை

    கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உதய கருடசேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றாக கும்பகோணம் அருகே நாதன்கோவில் கிராமத்தில் உள்ள ஜெகநாதபெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் செண்பகவல்லி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.

    நந்திக்கு சாபவிமோசனம் கிடைத்த தலம் என தலபுராணம் கூறுகிறது. இங்கு நந்தி பெயரிலேயே தீர்த்தம் உள்ளது. பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோவில் பெருமாள் குறித்து திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களை பாடி உள்ளார். இங்கு மகாலட்சுமி பிரார்த்தனை செய்து 8 அஷ்டமி விரதம் இருந்து, 8-வது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்ததாக தலபுராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

    பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை நாளில் உதய கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு உதய கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஜெகநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கருட சேவை உற்சவத்தையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோபூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×