search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருநள்ளாறு நள தீர்த்தம்
    X
    திருநள்ளாறு நள தீர்த்தம்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை

    கொரோனா பரவல் எதிரொலியாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை விதித்து காரைக்கால் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், கோவில் ஐதீகமுறைப்படி, முதலில் நளன்குளத்தில் புனித நீராடுவார்கள். நீராடாதவர்கள், குறைந்தபட்சம் நளன் குளத்தில் இறங்கி, தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு, குளத்தையும் அங்குள்ள விநாயகரையும் வணங்கிவிட்டு, தர்பாராண்யேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்றுவிட்டு, கடைசியாக சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில், நாடெங்கும் கொரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளன் குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையிலும் மாவட்டத்தில் தொற்றுப் பரவலை தவிர்க்கும் வகையிலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி வரும் 31-ந் தேதி நள்ளிரவு வரை உடனடியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

    அதன்படி மறு அறிவிப்பு வரும் வரை, திருநள்ளாறு நளன் தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்படுகிறது. முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதியோர், குழந்தைகள், இணை நோய்கள் உள்ளோர், திருநள்ளாறு யாத்திரை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை அவசியம் போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கலெக்டர் அர்ஜூன் சர்மாவின் இந்த உத்தரவையடுத்து சனீஸ்வரர் கோவிலில் உள்ள நளன்குளத்தில் பக்தர்கள் உள்ளிட்ட யாரும் நீராட முடியாத அளவிற்கு, குளத்தில் இருந்த ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இதையும் படிக்கலாம்....நாளை முழு ஊரடங்கு: பவானி கூடுதுறையில் பரிகாரம், புனித நீராட தடை
    Next Story
    ×