search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமானுஜர்
    X
    ராமானுஜர்

    ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் கொடுத்த ராமானுஜர்

    ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.
    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது. திருமலையின் ஆதிமூர்த்தியான வராகசாமி தெப்பக் குளக்கரையில் தான் இருக்கிறார். ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே. திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 1137-ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார். திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான். அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவக் கோவிலா? வைணவக் கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

    ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார். ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு ராமானுசர் வீதி இருக்கிறது. கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது ராமானுசர் நந்தவனம் என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

    ஏழுமலை ஏறித் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். அதுவே ராமானுசக் கூடம் ஆனது. இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே சமபந்தி சாப்பாட்டை ராமானுசர் தொடங்கி வைத்து விட்டார். ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுசரே!

    ஏழுமலையானுக்குப் பச்சைக் கற்பூர நாமம் சாத்தவும் ராமானுசரே ஏற்பாடு செய்தார். சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார். இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரியபட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.

    வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூசையையும் ராமானுசர் வகுத்துக் கொடுத்தார். மலை அடிவாரத்தில் கீழ்த் திருப்பதி ஊரையும் உருவாக்கினார்.

    இப்படி ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது. ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.

    Next Story
    ×