என் மலர்

  வழிபாடு

  சிவகாமசுந்தரி அம்பாளுடன் நடராஜர் காட்சி அளித்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்ததை படத்தில் காணலாம்.
  X
  சிவகாமசுந்தரி அம்பாளுடன் நடராஜர் காட்சி அளித்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்ததை படத்தில் காணலாம்.

  நடன பந்தலில் அசைந்தாடி சிவகாமசுந்தரி அம்பாளுடன் நடராஜர் காட்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் நடன பந்தலில் அசைந்தாடியபடி சிவகாமசுந்தரி அம்பாளுடன் நடராஜர் காட்சி அளித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வழிபட்டனர்.
  உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் விமரிசையாக நடைபெறும். ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

  மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமி வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி, 4 வீதியில் வலம் வந்து காட்சி தந்தனர்.

  தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

  இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 5 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

  இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாலை 6.15 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

  அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர். இதையடுத்து மாலை 5.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

  விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியும், நாளை (புதன்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.
  Next Story
  ×