search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாணுமாலய சுவாமி கோவில்
    X
    தாணுமாலய சுவாமி கோவில்

    தாணுமாலய சுவாமி கோவிலில் நடக்கும் மார்கழி திருவிழா சிறப்புகள்

    மார்கழி திருவிழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தாணுமாலயனை தரிசித்து விட்டுச் செல்வார்கள்.
    தாணுமாலய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் பெரிய மற்றும் முக்கிய விழா என்று சொல்லப்படுவது மார்கழி திருவிழா தான். முதல் நாளில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த 10 நாட்களும் சுசீந்திரம் மட்டுமல்லாமல் குமரி மாவட்டம் முழுக்க களை கட்டியிருக்கும்.

    மார்கழி திருவிழா மகத்துவம் நிறைந்தது. இதில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏதாவது ஒன்றை உணர்த்துவதை போலவே திருவிழா அமைந்திருக்கும். திருவிழா தொடங்கும் முன்பு 10 ஊர் பிடாகைகளை கோவிலுக்கு அழைத்து மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். முதலில் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்கப்படும். அதன்பிறகே திருவிழா தொடங்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா 11-ந்தேதி தொடங்கியது.

    திருவிழாவுக்கு முந்திய நாள் (10-ந்தேதி) காலை 9.15 மணிக்கு திருவிழாவுக்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேளதாளத்துடன் முத்துக்குடை ஏந்தி வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    1-ம் திருவிழா: 1-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசர் பூஜை. 7.30 மணிக்கு தாணுமாலயன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைத்தார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடைபெற்றது.

    2-ம் திருவிழா: 12-ந்தேதி காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதல், தொடர்ந்து 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகர் திருவீதி உலா வருதல், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.

    3-ம் திருவிழா: 13-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10 மணிக்கு கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா வருதல் நிகழ்ச்சி, 10.30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி. தாணுமாலயனுக்கு நடைபெறும் விழாவை காண மக்கள்மார்களான கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் வருகிறார்கள்.

    4-ம் திருவிழா: 14-ந்தேதி காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.

    5-ம் திருவிழா: 15-ந்தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புதக் காட்சி. மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி.

    6-ம் திருவிழா: 16-ந்தேதி காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி.

    7-ம் திருவிழா: 17-ந்தேதி காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வருதல், மாலை 4.30 மணிக்கு நடராஜர் சுவாமிக்கு திருச்சாந்து சாத்துதல். மாலையில் யானை ஸ்ரீபலி, இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.

    8-ம் திருவிழா: 18-ந்தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேசுவரர் திருவீதி உலா வருதல், காலையும், மாலையும் அலங்கார மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் அஷ்டாபிஷேகம். இரவு 8 மணிக்கு சிதம்பரேசுவரர் திருவீதி உலா வருதல்.

    9-ம் திருவிழா: 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக திருவீதி உலா வருதல், 7.30 மணிக்கு தேரோட்டம். 60 அடி உயரத்தில் 5 அடுக்கு கொண்ட சுவாமி தேர், 40 அடி உயரம் கொண்ட அம்மன் தேர், 14 அடி உயரம் கொண்ட இந்திரன் தேர் மற்றும் 28 அடி உயர பிள்ளையார் தேரும் சுசீந்திரம் ரத வீதிகளில் வலம் வருதல். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளல். நள்ளிரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், தொடர்ந்து திருவிழா பார்க்க வந்த மக்கள் மார்கள் பிரிந்து செல்லும் சப்தாவர்ண காட்சி.

    10-ம் திருவிழா: 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், நடராஜமூர்த்திக்கு அஷ்டாபிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலா வருதல், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி. இத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

    மார்கழி திருவிழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தாணுமாலயனை தரிசித்து விட்டுச் செல்வார்கள். தேரோட்டத்தன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். பல்வேறு இடங்களில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
    Next Story
    ×