search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் கோவில்
    X
    சுசீந்திரம் கோவில்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா 11-ந்தேதி தொடங்குகிறது

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா வருகிற 11-ந் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 20- ந் தேதி வரை நடக்கிறது.

    முன்னதாக 10-ந் தேதி காலை 9.15 மணியளவில் திருவிழாவிற்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியர் சமுதாயத்தினர் கொடி பட்டத்தை மேள, தாளம் முழங்க முத்துக்குடை ஏந்தி வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான 11 -ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் தாணுமாலயர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது.

    12-ந் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதலும், 9 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வருதலும், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

    13-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமானம் வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும், இரவு 10.30 மணிக்கு சாமி வீதிஉலா வரும்போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும்" மக்கள் மார் "சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    14-ந் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், இரவு 10 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் நடைபெறும்.

    15-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் காட்சியும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடக்கிறது.

    16-ந்தேதி காலை 8 மணிக்கு வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடைபெறும்.

    17-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி வீதிஉலா வருதலும், இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும் நடக்கிறது.

    18-ந்தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும், பேரம்பலம் கோவில் முன் நடராஜ பெருமான் ஆனந்த நடன காட்சியும், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா வருதலும் நடக்கிறது.

    19-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 20 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜ மூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு விழாவும் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் மாலை கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்கமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
    Next Story
    ×