search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் தொட்டகணபதி.
    X
    சிறப்பு அலங்காரத்தில் தொட்டகணபதி.

    பசவனகுடி தொட்ட கணபதி கோவிலில் கடலைக்காய் திருவிழா தொடக்கம்

    பிரசித்தி பெற்ற பெங்களூரு தொட்ட கணபதி கோவிலில் கடலைக்காய் திருவிழா நேற்று தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    பெங்களூரு பசவனகுடி பகுதியில் தொட்ட கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கடலைக்காய் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். 3 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் காரணமாக கடலைக்காய் திருவிழாவை நடத்த மாநில அரசு, பெங்களூரு மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. இதனால் இந்த ஆண்டும் கடலைக்காய் திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்களிடம் கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் கொரோனா பரவல் வேகமாக குறைந்ததால் இந்த ஆண்டு கடலைக்காய் திருவிழாவை நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது. மேலும் நவம்பர் 29-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 1-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வந்தது. மேலும் திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கோவிலின் முன்பு கடலைக்காய் வியாபாரம் நடத்த கடைகளையும் போட்டனர்.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற கடலைக்காய் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவை எடைக்கு எடை கடலைக் காயை துலா பாரமாக கொடுத்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, எம்.எல்.ஏ.க்கள் ரவிசுப்பிரமணியா, உதய் கருடாச்சார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திருவிழாவில் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தொட்ட கணபதி, சிக்க கணபதியை தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி தொட்ட கணபதி, சிக்க கணபதி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கடலைக்காயை உற்சாகமாக வாங்கி சென்றனர்.

    இளம்பெண்கள் கடலைக்காய் வாங்கியதை படத்தில் காணலாம்.

    திருவிழாவையொட்டி கோவில் அமைந்து இருக்கும் சாலை விழாக்கோலம் பூண்டது. எங்கு திரும்பினாலும் கடைகளே தென்பட்டன. கடலைக்காய் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு உலக்குக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கடலைக்காய் விற்பனை செய்யப்பட்டது. அதை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் அந்த தெருவில் இருந்த அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை மாநகராட்சி மார்ஷல்கள் கண்காணித்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்த மார்ஷல்கள் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசத்தையும் வழங்கினர்.

    தொட்ட கணபதி கோவில் அருகே ஒரு கல்லூரி இருக்கிறது. அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் திருவிழாவில் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக செல்பி எடுத்து கொண்டனர். மேலும் விசில், பீப்பிகளை ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த ராட்டினங்களில் ஏறி ஆடி மகிழ்ந்தனர். குழந்தைகளை கவரும் வகையிலான ராட்டினங்களும் இடம் பெற்று இருந்தன. திருவிழாவையொட்டி பசவனகுடியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்தவர்கள் வாகனங்களை கோவிலின் அருகே உள்ள பூங்கா பகுதியில் நிறுத்தி சென்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. போலீசார் பரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×