search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அமர்வு தரிசனம் ரத்திற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    அமர்வு தரிசனம் ரத்திற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    திருவண்ணாமலை கோவிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமர்வு தரிசனம் ரத்து

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விழா நாட்களில் கோவில் அனுமதி சீட்டு வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவடைந்தது. விழா நாட்களில் கோவில் அனுமதி சீட்டு வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    24-ந் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் சாதாரணமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீபத் திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் நேற்று திருவண்ணாமலையில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதியில் பெரும்பாலானோர் அமர்வு தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் கோவிலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இதுகுறித்து கோவிலின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் விசேஷ நாட்கள் முடிந்து விட்டதால் இனி சாமியை அமர்வு தரிசனத்திற்கு சென்று கண்குளிர காணலாம் என்று வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் வரிசையில் வந்த பக்தர்கள் வேகமாக சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×