search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது
    X
    நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது

    நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது

    நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
    மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா நடக்கும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தேர்திருவிழா எளிமையாக நடந்தது. பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்தாண்டு(2021) 21-ந்தேதி(நேற்றுமுன்தினம்) நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா நடப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்து. அதன்படி நேற்றுமுன்தினம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர்திருவிழா நடந்தது. நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் 5 தேர்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு சாமிகளுக்கு அபிஷேகம், பூைஜ செய்யப்பட்டது. காலை 7.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை ஹர்ஷவர்தன் எம்.எல்.ஏ. வடம் பிடிப்பதன் மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து 5 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதன்படி முதலில் கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சாமி தேர்கள் புறப்பட்டது. இதைதொடர்ந்து கோவில் வீதியில் நஞ்சுண்டேஸ்வரர் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேரை வடம்பிடித்த இழுத்தபோது பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சரண கோஷமிட்டனர்.

    இதையடுத்து தேர்கள் கோவில் வளாகத்திற்கு இழுத்து வந்து பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து தேரோட்டம் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேரோட்டத்தில் மைசூரு மன்னர் குடும்பத்தினர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×