search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நூபுர கங்கையில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாளுக்கு பல்வேறு வைபவம் நடைபெற்றதை படங்களில் காணலாம்.
    X
    நூபுர கங்கையில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாளுக்கு பல்வேறு வைபவம் நடைபெற்றதை படங்களில் காணலாம்.

    கள்ளழகர் கோவிலில் தைலக்காப்பு திருவிழா: நூபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்

    இந்த திருவிழாவின் போது இங்கு மழை பெய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அழகர்கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.
    தென் திருப்பதி, திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் கள்ளழகர் கோவில் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைலக்காப்பு திருவிழா தனிச்சிறப்புடையது. இந்த திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. அன்று மாலை சுந்தரராஜபெருமாளுக்கு தைல காப்பு விழா நடந்தது. தொடர்ந்து மறுநாள் கோவில் உள்பிரகாரத்தில் இருக்கும் மேட்டு கிருஷ்ணன் சன்னதியில் சீராப்தி நாதன் சேவை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று நூபுரகங்கையில் பெருமாள் நீராடல் நடந்தது. இதையொட்டி கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், தனது இருப்பிடத்தில் இருந்து காலை 9 மணியளவில் நூபுர கங்கைக்கு புறப்பாடாகினார்.

    அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாமி எழுந்தருளி மலை அடிவாரத்தில் இருந்து புறப்பட்டார். மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சென்ற பெருமாளுக்கு வழியில் உள்ள அனுமார், கருடன் தீர்த்த எல்கையில் தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தன.

    மலைப்பாதையில் சென்று மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு கள்ளழகர் பெருமாளுக்கு சம்மங்கி, சந்தனாரி, திருத்தைலங்கள் சாத்தப்பட்டன. மதியம் 1 மணியளவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் பெருமாள் நீராடினார்.

    பின்பு மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    நேற்று மாலையில் மீண்டும் வந்த வழியாக பல்லக்கில் சென்ற பெருமாள், அழகர்கோவிலில் தனது இருப்பிடம் சேர்ந்தார். விழாவையொட்டி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் காரணமாக, பக்தர்கள் இந்த விழாவில் அனுமதிக்கப்படவில்லை. யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தைலக்காப்பு திருவிழா பக்தர்களுக்காக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    வருடம் ஒருமுறை கள்ளழகர் பெருமாள் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையில் ஐப்பசி மாதம் சென்று நீராடி வருவது தனிச்சிறப்பாகும். இந்த தைலக்காப்பு திருவிழாவையொட்டி கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக ராக்காயி அம்மன் கோவில் மற்றும் மண்டப பகுதிகள் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளாலும், பிச்சி, கோழிக்கொண்டை, ரோஜா உள்ளிட்ட பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    இந்த திருவிழாவின் போது இங்கு மழை பெய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அழகர்கோவில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் இணை கமிஷனர் அனிதா உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். அப்பன்திருப்பதி, சத்திரப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    Next Story
    ×