search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் கருட வாகனத்தில்ஆராட்டுக்காக எழுந்தருளிய போது எடுத்த படம்.
    X
    ஆதிகேசவ பெருமாளும், கிருஷ்ணசாமியும் கருட வாகனத்தில்ஆராட்டுக்காக எழுந்தருளிய போது எடுத்த படம்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டு விழா

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழாவில் நேற்று ஆராட்டு விழா நடந்தது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமி பவனி வருதல், கதகளி போன்றவை நடந்தன.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சாமி பவனி வருதல், கதகளி போன்றவை நடந்தன.

    விழாவில் நேற்று முன்தினம் சாமி தளியல் வேட்டை சிவன் கோவிலுக்கு வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் வழி நெடுக நின்று வரவேற்பு அளித்தனர்.

    விழாவின் இறுதி நாளான நேற்று காலை பெருமாள் வேட்டைக்கு சென்ற நிகழ்வை புனிதப்படுத்தும் திருவிலக்கம் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ பூதபலி நடைபெற்றது. இரவு ஆதிகேசவப்பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணசாமியும் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆராட்டுக்காக எழுந்தருளினர். அப்போது கோவில் பிரகாரத்தை 2 முறை வலம் வந்தனர்.

    சாமி மேற்கு நடை வழியாக வந்தபோது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பின்னர் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி வாள் ஏந்தி முன்செல்ல கோவிலில் இருந்து தளியல் நோக்கி சாமி பவனி நடந்தது. அப்போது, பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். தளியல் பரளியாற்றில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆராட்டு நடைபெற்றது.

    ஆராட்டுக்கு பின்னர் சாமி கோவிலுக்கு வந்த பின்னர் கொடி இறக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீசார் செய்திருந்தனர்.
    Next Story
    ×