search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி
    X
    பழனி

    பழனி முருகன் கோவிலில் மூலவரை படம் எடுக்கும் பக்தர்கள்: செல்போன் தடை தீவிரப்படுத்தப்படுமா?

    பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலவரை செல்போனில் படம் பிடிக்கின்றனர். இதனால் செல்போன் தடையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுடன் முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

    தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் அரசின் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தண்டபாணி நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் "செல்பி ஸ்பாட்" அமைக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் மூலவர் சிலையை புகைப்படம் எடுப்பதை தடுக்க கோவிலின் உட்பகுதியில் செல்போன், கேமரா போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிலர் செல்போனை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பதும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் பணம் செலுத்தி கால பூஜையில் தரிசனம் செய்யும் பக்தர்கள், அரசு அதிகாரிகள் சிபாரிசுடன் வரும் பக்தர்கள் சிலர் தங்களது செல்போன் மூலம் மூலவரை படம் பிடிப்பது தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே பழனி முருகன் கோவிலில் செல்போன் தடையை முழுவதுமாக தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×