search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கள்ளழகர் கோவிலில் உள்ள நூபுர கங்கையில் சிறுவன் புனித நீராடுவதை படத்தில் காணலாம்.
    X
    கள்ளழகர் கோவிலில் உள்ள நூபுர கங்கையில் சிறுவன் புனித நீராடுவதை படத்தில் காணலாம்.

    கள்ளழகர் கோவிலில் 7 மாதங்களுக்கு பிறகு நூபுர கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

    கள்ளழகர் கோவிலில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினார்கள். கிடாய் வெட்டி பொங்கல் வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 திவ்விய தலங்களில் ஒன்று. கொரோனா தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இதையொட்டி தீர்த்த தொட்டியில் பக்தர்கள் நீராடாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நூபுர கங்கையில் பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசு நேற்று முதல் நூபுர கங்கையில் பக்தர்கள் நீராட அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று கள்ளழகர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நூபுர கங்கையில் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை வழிபட்டனர்.

    இது குறித்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூறியதாவது:-

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த காலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை நிலவியது. தற்போது அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது. கள்ளழகர் கோவிலில் உள்ள நூபுர கங்கை வற்றாத புனிதமான தீர்த்தமாகும். இங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களாக புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடையை நீக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நூபுர கங்கையில் புனித நீராடுவது மன நிம்மதி அளிக்கிறது.நூபுர கங்கை அபூர்வ மூலிகை கலந்த தீர்த்தமாகும். சுபகாரியங்கள், கும்பாபிஷேகம், திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு, தென் மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    அழகர்கோவிலில், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு நேர்த்தி கடனாக கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட அரசு அனுமதி வழங்கி இருப்பதை வரவேற்கிறோம். ராக்காயி அம்மன், சோலைமலை முருகன், கள்ளழகர், மற்றும் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில்களில் வழக்கம் போல் தேங்காய், பழம் வைத்து பூ மாலையுடன் அர்ச்சனை செய்து வழிபடலாம். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×