search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தி.நகர் திருப்பதி ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
    X
    தி.நகர் திருப்பதி ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை: தி.நகர் திருப்பதி ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு இருந்தன.

    தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை முதல் கோவில்கள் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் ஆர்வமாக கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று புரட்டாசி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு இருந்ததால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று கோவில்கள் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக இன்று பெருமாள் கோவில்களிலும் வைணவத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    சென்னை தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் திருப்பதி தேவஸ்தான ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள வைணவத் தலங்களிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இதே போல் புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், திருநீர்மலை பெருமாள் கோவில் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர்.

    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு இன்று காலை 6 மணி முதலே பக்தர்கள் வரத் தொடங்கினார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் இன்று காஞ்சீபுரம் வருகை தந்து வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர் மழை காரணமாக அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதை பார்த்தும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதே போல் திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    Next Story
    ×