search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    10 நாட்களுக்கு பிறகு அனுமதி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

    10 நாட்களுக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழா நடைபெற்ற கடந்த 10 நாட்கள் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் சுவாமி வீதி உலா போன்றவை ரத்து செய்யப்பட்டு, விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்திலேயே பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற்றது.

    இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு கோவிலில் சாமி தரிசனத்துக்கு நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். எனினும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    ஆவணி திருவிழாவின் 11-ம் திருநாளான நேற்று காலையிலும், மாலையிலும் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர்.

    விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களுக்கு ‘இலவச முடிகாணிக்கை’ என்ற ரசீதுடன் பிளேடும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×