search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
    X
    சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

    ஆவணி திருவிழா: வள்ளி-தெய்வானையுடன் சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் உலா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் உலா வந்தார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழா நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி வரையிலும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    7-ம் திருநாளான நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உருகுசட்ட சேவை நடைபெற்றது. காலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெற்றிவேர் மாலை அணிந்து சப்பரத்தில் எழுந்தருளி கோவிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார்.

    மாலையில் உள்பிரகாரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் சிவப்பு நிற பட்டாடைகளாலும், சிவப்பு நிற மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிவப்பு நிற பட்டு உடுத்தி, சிவப்பு நிற மலர்கள் சூடி செம்மேனியுடன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். சுவாமி சண்முகர் பின்புறம் சிவன் அம்சமாக காட்சி கொடுத்தார்.

    8-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) பகலில் சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார்.

    10-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறாது. சுவாமி-அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வருகின்றனர்.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×