என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரம் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரம் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான அனுமதி விரைந்து வழங்கப்படுமா?

    பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான அனுமதி விரைந்து வழங்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உள்ள துர்க்கை அம்மன் சன்னதி பிரசித்திப்பெற்றதாகும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து துர்க்கை அம்மனை வழிபடுவார்கள்.

    கோவிலில் தேனுபுரீஸ்வரர் சன்னதிக்கு முன்பு பழமை வாய்ந்த கொடிமரம் இருந்து வந்தது. இந்த மரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த கொடிமரத்தை மாற்றி அமைத்து புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய கொடி மரம் அகற்றப்பட்டு, கோவிலின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அங்கு 47 அடி உயரத்தில் தேக்கினால் ஆன புதிய கொடிமரம் ரூ.1 லட்சம் செலவில் வாங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த மரம் கெட்டியாக இருக்கவும், உடையாமல் இருக்கவும், கரையானில் இருந்து பாதுகாக்கவும் அதன் மேல் இலுப்பை எண்ணெய் பூசப்பட்டு, துணி சுற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கொடிமரத்தை நிறுவுவதற்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அனுமதிக்காக கோவில் நிர்வாகத்தினர் காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்துவிட்டால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி கொடிமரம் அமைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

    எனவே, விரைவில் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் அமைப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×