search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி மேற்கு கிரிவீதியில் காவடி ஆட்டம் ஆடிய பக்தர்கள் குழுவினர்.
    X
    பழனி மேற்கு கிரிவீதியில் காவடி ஆட்டம் ஆடிய பக்தர்கள் குழுவினர்.

    பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: காவடி ஆட்டம் ஆடி உற்சாகம்

    2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதித்திருப்பதன் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். காவடி ஆட்டம் ஆடி பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதேபோல் மாத கிருத்திகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதும்.

    இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஆடி மாத கிருத்திகையான இன்றும் (திங்கட்கிழமை), ஆடிப்பெருக்கான நாளையும் (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கண்ட 2 நாட்களிலும்
    பழனி
    முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதாலும், 2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கபட்டிருப்பதாலும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை முதலே பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதேபோல் மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளான குடமுழுக்கு நினைவரங்கம், படிப்பாதை, மின்இழுவை ரெயில்நிலையம், பாதவிநாயகர் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த பக்தர் குழுவினர் காவடி எடுத்து பழனி கிரிவீதியில் ஆடி வந்தனர். இது பக்தர்கள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பக்தர்கள் பலர் முடிகாணிக்கை செலுத்தினர்.

    இதற்கிடையே பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பழனி சுகாதாரத்துறை சார்பில் பஸ்நிலையம், கோவில் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
    Next Story
    ×