என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாடிக்கொம்பு பெருமாள் கோவில், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் நடந்த காட்சி.
    X
    தாடிக்கொம்பு பெருமாள் கோவில், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் நடந்த காட்சி.

    வடமதுரை, தாடிக்கொம்புசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்

    வடமதுரை, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி ஆடி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.

    இதற்காக கோவில் கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜபெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மாலதி, பட்டாச்சாரியார்கள் ரமேஷ், ராமமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.

    விழாவையொட்டி வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், 24-ந்தேதி மாலை வெள்ளித் தேரோட்டமும் கோவில் வளாகத்திலேயே நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இந்த நிகழ்ச்சிகளுக்கு, பின்னர் பக்தர்கள் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    இதேேபால் வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தொடர்ந்து 13 நாட்கள் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பக்தர்கள் இன்றி கோவிலில் ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். அப்போது பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 22-ந்தேதியும், முத்துப்பல்லக்கு ஊர்வலம் 26-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் மாலதி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×