என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுர சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.

    கோவிலின் முன்பகுதி கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

    இந்தநிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு
    கும்பாபிஷேகம்
    நடைபெற்றது. இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்து இருந்தனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த பொன்னர்-சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தார். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில், 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது. அதைத்தொடர்ந்து, ராஜ கோபுரத்தின் ஏழு நிலைகளிலும் உள்ள மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற வேண்டி இருந்தது.

    விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இதன் காரணமாக தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தார்.

    அப்போது ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு தரமான வர்ணம் தீட்ட வேண்டும் என்றும், அந்த பணி காலதாமதமின்றி நடைபெறவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமி சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×