என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருவுடையாருக்கு தீபாராதனை நடந்ததையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றதையும் படத்தில் காணலாம்.
    X
    பெருவுடையாருக்கு தீபாராதனை நடந்ததையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றதையும் படத்தில் காணலாம்.

    80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில்... பக்தர்கள் மகிழ்ச்சி

    பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும்போது அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவில்கள் மூடப்பட்டன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரியகோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள், பாரம்பரிய நினைவு சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் மூடப்பட்டன.

    இதேபோல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் மே மாதம் முதல் மூடப்பட்டது. இதையடுத்து இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடாமல் இருந்தனர்.

    அதேபோல் கோவிலை நம்பி இருந்த வியாபாரிகள், அர்ச்சனை பொருட்கள் விற்போர், பூ, மாலை விற்பனை செய்யும் வியாபாரிகள், பாரம்பரிய சின்னம், சுற்றுலா தலங்களில் உள்ள வழிகாட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் கோவில்களை திறக்க அனுமதித்தது. இதனால் கடந்த 2 நாட்களாக கோவில்களை பணியாளர்கள் சுத்தம் செய்து, தடுப்புகள் அமைத்து கிருமிநாசினியும் தெளித்து வந்தனர். மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று சாமி தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அதன்படி நேற்று காலை முதல் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அனைத்து கோவில்களிலும் அபிஷேம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று முககவசம் அணிந்தபடி சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் அமர அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும்போது அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. கோவிலில் மூலவர் முன்பாக குறிப்பிட்ட இடைவெளியோடு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சை பெரியகோவில் 80 நாட்களுக்குப்பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியோடு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×