search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரைக்கால் அம்மையார்
    X
    காரைக்கால் அம்மையார்

    காரைக்கால் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது

    காரைக்காலில் மாங்கனி திருவிழா நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
    காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும், காரைக்காலில் 5 நாட்கள் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், பக்தர்கள் இன்றி விழா முழுவதும், கைலாசநாதர் கோவில் வளாகத்திலேயே நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா தொற்றை காரணம் காட்டி கோவிலுக்குள்ளே விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. 7 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டார்.

    விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் உபயதாரர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கி மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவி வருவதால் சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யாணம் நிகழ்ச்சி முடிந்தவுடன், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். முதலில் 100 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அவர்கள் வெளியேறிய பிறகு அடுத்த பகுதியாக 100 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், 24-ந் தேதியும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
    Next Story
    ×