search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் இன்று வைகாசி விசாக திருவிழா நடக்கிறது

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த ஆண்டை போலவே வைகாசி விசாக திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) உள்திருவிழாவாக நடக்கிறது. இதில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு குடம், குடமாக மகா பாலாபிஷேகம் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் :

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒரு நாள் விசாக விழாவாகவும், மற்றொரு நாள் மொட்டையராசு உற்சவமாகவும் நடைபெறும். கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்கள் மூடப்பட்டன.

    அதனால் வரலாற்றிலேயே முதல்முறையாக இருப்பிடத்தைவிட்டு இடம்பெறாத நிலையில் (சண்முகர் சன்னதியில் இருந்து விசாக கொடுமண்டபத்திற்கு) சண்முகர் சன்னதியிலேயே வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை உள்திருவிழாவாக நடத்த வேண்டும். வைகாசி விசாக தினத்தன்று சண்முகபெருமானுக்கு பாலாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி கடந்த 11-ந்தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது.

    இதை தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையரும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தக்காருமான செல்லத்துரை உத்தரவின்பேரின் கோவில் நிர்வாகத்தின் கீழ் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் சண்முகர் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி சண்முகப்பெருமானுக்கு மகா பாலாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×