search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    நற்காரியங்களால் கிடைக்கும் அளப்பரிய பலன்- ஆன்மிக கதை

    சிவபெருமானின் பக்தனாக மாறியிருந்த அந்த சூதாடி, இந்திரனிடம் இருந்த ஐராவதம் என்ற யானையை, அகத்தியருக்கு தானமாக அளித்தான்.
    முன்னொரு காலத்தில் சூதாடி ஒருவன் இருந்தான். அவன், சூதாடுவதன் மூலம் பணம் ஈட்டியதோடு, அனைத்து கெட்ட பழக்கங்களும் கைவரப்பெற்றவனாக இருந்தான். அதோடு இறைவனையும், சாதுக்களையும் அவதூறாக பேசி வந்தான். ஒரு நாள் அவனது தந்திரத்தால், சூதாட்டத்தில் பெரும் பணம் ஈட்டினான். அதனால் மகிழ்ச்சி அடைந்தவன், சந்தனம், மாலை ஆகியவற்றுடன் விலைமாதுவின் வீட்டை நோக்கிப் பயணப்பட்டான். மது போதை காரணமாக கால்கள் தள்ளாட நடந்தவன், ஓரிடத்தில் கால் இடறி கீழே விழுந்து நினைவிழந்தான்.

    நினைவு திரும்பியதும் அவனது மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். இதுவரையான தனது தீய வாழ்க்கையைப் பற்றி நினைத்து வருந்தினான். மனதில் ஏதோ ஒரு தெளிவு பிறந்திருந்தது. அந்த சுத்தமான மனதுடன், அங்கிருந்த சிவலிங்கத்திற்கு தன் கையில் இருந்த சந்தனம், மாலை ஆகியவற்றை அணிவித்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றான். ஆனால் அன்று இரவே அவனது உயிர் பிரிந்தது. எமதூதர்கள் வந்து, அந்த சூதாடியை எமலோகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    எமதர்மராஜன், சூதாடியைப் பார்த்து “நீ செய்துள்ள இழிவான செயல்கள் காரணமாக நரகத்தில் மிகவும் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

    அதைக்கேட்டு மிகவும் அச்சம் அடைந்த அந்த சூதாடி, “சுவாமி.. நான் ஏதாவது புண்ணியம் கூட செய்திருக்கலாம் அல்லவா? தயவுசெய்து அதற்கான பலனையும் பார்த்து தீர்ப்பு கூறுங்கள்” என்று வேண்டிக்கொண்டான்.

    உடனே எமதர்மராஜன் தனது உதவியாளரான சித்ரகுப்தனை பார்த்தார். அவர், “சூதாடியே.. நீ இறப்பதற்கு முன் சிறிதளவு சந்தனத்தை, சிவலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்துள்ளாய். அதன் பயனாக, நீ சொர்க்கத்தில் மூன்று நாழிகை நேரம் அரசனாக வீற்றிருக்கும் தகுதியைப் பெற்றுள்ளாய்” என்றார்.

    அதைக் கேட்ட சூதாடி, “சுவாமி.. அப்படியானால் முதலில் சொர்க்கத்தில் நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க அனுமதி தாருங்கள். அதன்பிறகு நரகத்தில் நான் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை மொத்தமாக அனுபவித்துக்கொள்கிறேன்” என்று கேட்டான்.

    அவனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சூதாடி, சொர்க்கலோகம் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு இந்திரனிடம் நடந்தவற்றைக் கூறி, ‘மூன்று நாழிகை நேரம் நீ இந்திரப் பதவியை துறக்க வேண்டும். இவனது அரச பதவி காலம் முடிந்ததும் நீ மீண்டும் பதவி ஏற்றுக்கொள்ளலாம்’ என்று சொல்லப்பட்டது.

    அதன்படி இந்திரன் அரியணையில் இருந்து இறங்க, சொர்க்கலோகம் எனப்படும் தேவர்களின் உலகத்திற்கு, சூதாடி அரசனானான். ‘மூன்று நாழிகை நேரத்தில் என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தவன், ஈசனை சரணடைந்தான். அதோடு பொருளின் மீது, போதையின் மீது இருந்த பற்று அவனுக்கு அறவே அற்றுப் போயிருந்தது. ஆகையால் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொன்னையும், பொருளையும் பிறருக்கு தானமாக கொடுக்கத் தொடங் கினான்.

    சிவபெருமானின் பக்தனாக மாறியிருந்த அந்த சூதாடி, இந்திரனிடம் இருந்த ஐராவதம் என்ற யானையை, அகத்தியருக்கு தானமாக அளித்தான். உச்சைச்ரவஸ் என்ற குதிரையை விஸ்வாமித்திர முனிவருக்கு வழங்கினான். காமதேனு என்னும் பசுவை வசிஷ்டருக்கும், சிந்தாமணி என்னும் ரத்தினத்தை காலவ மகரிஷிக்கும், கற்பக மரத்தை கவுண்டின்ய முனிவருக்கும் அளித்துவிட்டான். இப்படி தனது மூன்று நாழிகை நேர அரசப் பதவி காலம் நிறைவடையும் வரை, ஒவ்வொரு பொருளாக மற்றவர்களுக்கு தானம் அளித்துக் கொண்டே இருந்தான். மூன்று நாழிகை நேரம் முடிந்ததும், யாரிடமும் எதுவும் பேசாமல் அரியணையில் இருந்து இறங்கிப் போய்விட்டான்.

    தேவேந்திரன் திரும்பி வந்து பார்த்தபோது, அமராவதி எனப்படும் சொர்க்கலோகமே பொன் பொருட்கள் இன்றி வெறுமையாக காட்சி தந்தன. உடனே கோபத்துடன் எமலோகம் சென்றவன், “எமதர்மரே.. நீங்கள் என்னுடைய பதவியை ஒரு சூதாடிக்கு கொடுத்து தகாத பணியை செய்து விட்டீர்கள். அவன் அமராவதியையே வறுமைக்குரியதாக மாற்றிவிட்டுச் சென்றுவிட்டான். என்னுடைய பொன், பொருள், ரத்தினங்கள் அனைத்தையும் முனிவர்களுக்கு தானம் அளித்து விட்டான்” என்று முறையிட்டான்.

    அதற்கு எமதர்மன், “தேவர்களின் அரசனான நீங்கள், இழந்துவிட்ட பொருட்களை எண்ணிதான் மிகவும் வருந்துகிறீர்கள். உங்களுக்கு அவற்றின் மீதான பற்று இன்னும் போகவில்லையா?.. நீங்கள் இதுவரை பல நூறு யாகங்களைச் செய்து பெற்ற பலனைவிட, இந்த மூன்று நாழிகை நேரத்தில் அந்த சூதாடி செய்த தானங்களால் அதிக பலனை அடைந்துவிட்டான். அதோடு இனி அவன் அனுபவிக்க இருந்த நரக தண்டனையும் ரத்தாகிப்போனது. தன்னிடம் அதிகாரம் கிடைத்த பின்னும், அதை அனுபவிக்கத் துடிக்காமல், மற்றவர்களுக்கு நற்காரியங்களைச் செய்பவனே மேலானவன். நீங்கள் முனிவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து பொன், பொருள், ரத்தினங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.
    Next Story
    ×