search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடல்
    X
    திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடல்

    திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடல்: தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனுமதி

    கொரோனா 2-வது அலையால் புனித நீராட தடை விதிக்கப்பட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டது. தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
    திருச்செந்தூர் :

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது.

    இதையடுத்து அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.

    கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை பகுதி பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் நாழிகிணற்றில் பக்தர்கள் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தேங்காய், பழம் கொண்டு வந்து அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் பக்தர்கள் இளைபாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே சாமி தரிசனத்திற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதேபோல் அன்று கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். குறைவான அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் கடற்கரை பகுதியான காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி, சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×