search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாயார் சவரிக்கொண்டையுடன், ராக்கொடி, நாகபரணம் மாணிக்ககற்கள் பதித்த ஜடை பட்டையுடன் அருள்பாலித்த காட்சி.
    X
    தாயார் சவரிக்கொண்டையுடன், ராக்கொடி, நாகபரணம் மாணிக்ககற்கள் பதித்த ஜடை பட்டையுடன் அருள்பாலித்த காட்சி.

    நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
    108 திவ்ய தேசங்களில் இரண்டாவது வைணவத் தலம் என்ற பெருமைக்குரிய உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நம்பெருமாள் -கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று அதிகாலை 3:30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளி 11 மணி அளவில் உறையூர் நாச்சியார் கோவில் வந்து சேர்ந்தார்.

    கோவில் மகாஜனம் உபய மண்டபத்தில் நம் பெருமாளுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாச்சியார் முன் மண்டபத்தில் பகல் 2 மணிக்கு நம்பெருமாள் எழுந்தருளினார். 1.15 மணிக்கு அந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபம் சென்றடைந்தார். பிற்பகல் 2 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இந்த காட்சியை காண்பதற்காகவும் நம்பெருமாள்- நாச்சியாரின் அருள் பெறுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்த பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று தரிசனம் செய்தனர்.மற்றவர்கள் கோவில் வளாகத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் நின்றனர்.

    நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை விழாவையொட்டி கோவில் வளாகம் மட்டுமின்றி உறையூர் பகுதி முழுவதுமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவில் அருகில் தற்காலிக கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்ததால் அவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். வெயிலில் வரும் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குளிர்பானங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

    பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நடைபெற்றது. அதிகாலை 1.30 மணிக்கு நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை அடைந்தார்.
    Next Story
    ×