search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.
    X
    வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

    தை அமாவாசை: வேதாரண்யம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்

    நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
    அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். நம் முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியை பெறக்கூடிய அற்புதநாள். அதிலும் 3 அமாவாசைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த திதி நாளாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை என 3 அமாவாசையிலும் தவறாமல் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். அதன்படி இன்று தை அமாவாசை ஆகும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள், புனித தலங்களில் குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.

    இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். கருகமணி, எலுமிச்சம் பழம், தேங்காய், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை கடலில் விட்டு புனித நீராடினர். பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வணங்கி சென்றனர்.

    இதேப்போல் கோடியக் கரை அக்னிதீர்த்தம், ஆதி சேது சித்தர் கட்டம் கடற்கரை, சன்னதி கடல் ஆகிய பகுதிகளில் நீராடினார்கள். பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை துலா கட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்தனர்.

    திருவாரூர், தியாகராஜர் கோவில் அருகே உள்ள கமலாலய குளத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    கங்கை நதிக்கு நிகரான காவிரி ஆறு ஓடும் திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் பித்ரு கடன் செலுத்துவது “காசிக்கு வீசம் கூட” என்று சிறப்பித்து கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராட பேரூராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இன்று காவிரி ஆறு செல்லும் பாதையில் தடுப்பு அமைக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பொதுமக்கள் ஆங்காங்கே காவிரி ஆற்றில் புனித நீராடி னர். படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தஞ்சையில் பலர் தங்களது வீட்டின் மாடியில் முன்னோர்கள் படங்களை சுத்தம் செய்து துளசி, வில்வம் சார்த்தி வழிபாடு நடத்தி தர்ப்பணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த உணவை படையலிட்டனர். மேலும் பசுவுக்கு அகத்திக்கீரையும், காகத்துக்கு படையலிட்ட உணவையும் வழங்கினர்.
    Next Story
    ×