search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈசனால் திரும்பக் கிடைத்த இளமை
    X
    ஈசனால் திரும்பக் கிடைத்த இளமை

    ஈசனால் திரும்பக் கிடைத்த இளமை

    தில்லை எனப்படும் சிதம்பரத்தில் அவதரித்தவர், திருநீலகண்டர். இவரும், இவரது மனைவியும் சிவ பக்தியில் சிறந்தவர்களாக இருந்தனர். இவரது வாழ்க்கையில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
    தில்லை எனப்படும் சிதம்பரத்தில் அவதரித்தவர், திருநீலகண்டர். இவரும், இவரது மனைவியும் சிவ பக்தியில் சிறந்தவர்களாக இருந்தனர். மனைவி மீது மிகவும் அன்பு கொண்டவராகவே திருநீலகண்டர் இருந்தார் என்றாலும், அன்று அவரது புத்தி தடுமாறி விட்டது. அவர் தன் இளமை ஆசை காரணமாக விலைமாது ஒருத்தியை நாடிச் சென்றுவிட்டார்.

    இது தெரிந்த காரணத்தால், வீட்டிற்கு வந்த திருநீலகண்டரிடம் அவரது மனைவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விஷயத்தை அறியும் நோக்கில், படுத்திருந்த தனது மனைவியை தொட்டு எழுப்புவதற்காக கையை நீட்டினார். அப்போது நீலகண்டர் அதிர்ந்துபோகும்படியாக “என்னைத் தொடாதீர்கள்” என்று சத்தமிட்டார், அவரது மனைவி. “எப்போது விலைமாதுவை நாடிச் சென்றீர்களோ, அப்போதே என்னை தொடும் உரிமையை இழந்து விட்டீர்கள். இனி நான் இறக்கும் வரை என்னை நீங்கள் தொடக்கூடாது. இது சிவன் மீது ஆணை” என்று வெடித்தார்.

    மனைவியின் வார்த்தைகளால் மனம் வருந்தினாலும், அதை தன் தவறுக்கு தண்டனையாக எடுத்துக் கொண்டார், திருநீலகண்டர். எனவே மனைவியைத் தீண்டவே இல்லை. அதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. இருவருக்கும் சிவசிந்தனையே மேலோங்கியிருந்தது. அவர்கள் எப்போதும் சிவ பக்தியிலேயே திளைத்திருந்தனர். காலங்கள் கடந்தன. திருநீலகண்டரும், அவரது மனைவியும் வயோதிகத்தை எட்டியிருந்தனர்.

    ஒரு நாள் அவர்களின் வீட்டு வாசலில் ஒரு சிவனடியார் வந்து நின்றார். அவரை வீட்டிற்குள் வந்து உணவருந்தும்படி அழைத்தார், திருநீலகண்டர். அதனை மறுத்த சிவனடியார், “எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். என்னுடைய திருவோடை பத்திரமாக வைத்துக் கொள். சில நாட்கள் கழித்து வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்றார்.

    திருநீலகண்டரும் அந்த திருவோடை பணிவுடன் வாங்கி வீட்டிற்குள் பத்திரமாக வைத்தார். நாட்கள் கடந்தன. திருவோடை அளித்த சிவனடியார் திரும்பி வந்து, திருநீலகண்டரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு, அவரை அழைத்தார். வெளியே வந்து பார்த்தார் திருநீலகண்டர். அங்கு தன்னிடம் திருவோடு கொடுத்த சிவனடியார் இருப்பது கண்டு மகிழ்ந்தார். பின்னர் சிவனடியாரின் திருவோடை வீட்டில் தேடியபோது, அதனைக் காணவில்லை. வெளியே அமர்ந்திருந்த சிவனடியாரோ, “எனக்கு நேரமாகிறது” என்றார்.

    மனைவியை அழைத்து, திருவோடு பற்றி கேட்டதற்கு அவருக்கும் தெரியவில்லை. இருவருமாக வீடு முழுவதும் அலசி விட்டனர். ஆனால் திருவோடு மாயமானது எப்படி என்று புரியவில்லை. கவலையடைந்த திருநீலகண்டர் நேராக சிவனடியாரிடம் சென்று, “ஐயா! தாங்கள் தந்த திருவோடு காணாமல் போய்விட்டது. இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள். நானே ஒரு அழகிய திருவோடை உருவாக்கி தருகிறேன்” என்றார்.

    சிவனடியாருக்கு கோபம் வந்து விட்டது. “உங்கள் குழந்தைக்கு பதிலாக வேறொரு குழந்தையை கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என் திருவோடு சிறப்பு வாய்ந்தது என்று உனக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் திருடிக்கொண்டாய்” என்றார். திருநீலகண்டரோ “இல்லை, இல்லை” என்று பதறினார்.

    உடனே சிவனடியார், “அப்படியானால் இங்குள்ள கோவில் திருக்குளத்துக்கு வா. உன் மனைவியின் கரம் பிடித்து, ‘திருவோடை நான் திருடவில்லை’ என்று கூறியபடி, குளத்தில் ஒரு முறை மூழ்கி எழுந்திரு. அப்போது நம்புகிறேன்” என்றார்.

    ‘பல ஆண்டுகளுக்கு முன்பு சிவனின் மீது ஆணையிட்டு மனைவி சொன்னதற்காக காத்துவரும் சத்தியத்தை இப்போது மீறும்படி ஆகுமோ?. அப்படிச் செய்தால் சிவபெருமானை அவமதித்ததுபோல் ஆகிவிடுமே. ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்ட திருநீலகண்டர், “ஐயா.. நான் மட்டும் குளத்தில் மூழ்கி எழுந்து உங்களுக்கு உறுதிமொழி அளிக்கிறேன்” என்றார்.

    சிவனடியார் பொறுமை இழந்து கத்தத் தொடங்கினார். “என் திருவோடையும் தர மறுக்கிறாய். நான் கூறும் சொல்லையும் மதிக்க மறுக்கிறாய். உன்னை நம்பமாட்டேன். ஊர் சபையிலேயே இதற்கு நியாயம் கிடைக்கட்டும்” என்று கூறி ஊர் சபையைக் கூட்டினார்.

    திருநீலகண்டரைப் பற்றி ஊர் மக்களுக்கு நன்கு தெரியும். ஆயினும் வழக்கு என்று வந்து விட்டதால், ஊரார் விசாரிக்கத் தொடங்கினர். “திருநீலகண்டரே.. சிவனடியார் சொல்வது போல், நீங்களும், உங்கள் மனைவியும் கரம் பிடித்து, குளத்தில் மூழ்கி எழுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது.”

    ஊராரின் கேள்வியால் நடந்த உண்மைகளை மறைக்காமல் சபையில் சொன்னார், திருநீலகண்டர். இதையடுத்து ஊரார் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி நிண்ட குச்சியின் ஒரு முனையை திருநீலகண்டரும், மறு முனையை அவரது மனைவியும் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்க வேண்டும் என்று முடிவானது. அதன்படியே அவர்களும் செய்தனர்.

    குளத்தில் மூழ்கி எழுந்த திருநீலகண்டரும், அவரது மனைவியும் இளமையாக மாறியிருந்தனர். அதைப் பார்த்து ஊர் மக்கள் திகைத்தனர். திருநீலகண்டரும், அவரது மனைவியும் கூடத்தான். வழக்கு தொடுத்திருந்த சிவனடியாரை காணவில்லை.

    அப்போது வானில் இருந்து ஓர் அசரீரி ஒலித்தது. “திருநீலகண்டரே.. நீயும் உன் மனைவியும் என்மீது கொண்ட பக்தியால், சத்தியத்தை மீறாமல் வாழ்ந்து வயோதிகத்தை எட்டி விட்டீர்கள். அதன்காரணமாக உங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் நீங்கள் இல்லறத்தில் ஈடுபட்டு நல்லறம் காணுங்கள்” என்றது அந்தக் குரல்.

    சிவபெருமான் தங்கள் மீது கொண்ட கருணையை நினைத்து, அந்த தம்பதியர் ஆனந்தக் கண்ணீரில் திளைத்துப் போயினர்.
    Next Story
    ×