
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, நவராத்திரி திருவிழா, ஆடி அமாவாசை விழா, தை அமாவாசை விழா, திருக்கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பவுர்ணமி, மார்கழி ஊஞ்சல் உற்சவம், சித்திரை விசு கனி காணுதல் உள்பட பல்வேறு விழாக்கள் மற்றும் வழிபாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நடத்தப்படும்.
ஆனால் தை மாத நிறைபுத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியார் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும். நெற்பயிர்கள் அறுவடையையொட்டி தை மாதத்தில் இந்த நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். அதேபோல இந்த ஆண்டுக்கான தை நிறைபுத்தரிசி பூஜை நேற்று காலை நடந்தது. அதன்படி அதிகாலை 5.30மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி நேற்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
வழக்கமாக வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை தர்மசாஸ்தா கோவிலில் வைத்து பூஜை செய்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு எடுத்து வருவார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக நெற்கதிர்களை வயலில் இருந்து கோவில் ஊழியர்கள் நேரடியாக பகவதிஅம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அதன் பிறகு அந்த நெற்கதிர்களை பகவதியம்மன் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள மண்டபத்தில் படைத்து வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்கிடையே ஐதீகத்தின் படி நெற்கதிர்கள் மற்றும் தேங்காய், பழங்கள் அறுவடை தர்மசாஸ்தா கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி ஆகியோர் நடத்தினார்கள்.
சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் முன்னிலையில் நெற்கதிர்களை கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் இல்லத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும், விளைநிலங்களில் அந்த நெல்மணிகளை தூவினால் அந்த ஆண்டு பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம் ஆகும். எனவே இந்த நெற்கதிர் பிரசாதம் வாங்குவதற்காக நேற்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
நிறைபுத்தரிசி சிறப்பு வழிபாடுடன் நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உச்சி கால பூஜை, இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை போன்றவை நடந்தது. நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், ஜெயச்சந்திரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ ராமச்சந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், கோவில் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் செய்துஇருந்தனர்.