search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி
    X
    பழனி

    பழனி தைப்பூச திருவிழா நாளை தொடக்கம்: நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

    பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.
    திண்டுக்கல் :

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா, நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதுகுறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறியதாவது:-

    பழனிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர பழனி நகர் முழுவதும் 30 கண்காணிப்பு கோபுரங்கள், 30 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது.

    மேலும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் தெரிந்த போலீசார் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மலைக்கோவில், பாதவிநாயகர் கோவில், அடிவாரம் போலீஸ் நிலையம், பஸ்நிலையங்கள், இடும்பன்குளம், சண்முகாநதி ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிறப்பு மையங்களில் இருப்பார்கள்.

    இதேபோல் பக்தர்களின் வசதிக்காக பஸ்நிலையம், தற்காலிக பஸ்நிலையம், ரெயில் நிலையம், இடும்பன்குளம், சண்முகாநதி, மலைக்கோவிலுக்கு செல்லும் இடங்களில் வழிகாட்டி பதாகைகள் வைக்கப்படுகிறது. பாதயாத்திரை வழித்தடங்களில் 40 மோட்டார் வாகனங்கள், 11 ஜீப்புகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து செல்கின்றனர்.

    பாதயாத்திரை பக்தர்களின் நலன் கருதி 26-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு வரும் அனைத்து வாகனங்களும் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, தாளையம் வழியாகவும், பொள்ளாச்சி வழியாக வரும் கனரக வாகனங்கள் தாளையம், தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம் வழியாகவும் திருப்பி விடப்படும்.

    பக்தர்கள் நெரிசலின்றி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தேவர் சிலை, திருஆவினன்குடி, சன்னதிரோடு, பாதவிநாயகர் கோவில், குடமுழுக்குமண்டபம் வழியாக யானைப்பாதையில் செல்ல வேண்டும். பின்னர் தரிசனம் செய்தவர்கள் படிப்பாதை, பாதவிநாயகர் கோவில், கவுரிகிரு‌‌ஷ்ணா சந்திப்பு, அய்யம்புள்ளி சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும். இதற்காக அவை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.மேலும் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்வதற்கு குடமுழுக்கு மண்டபம், கிரிவீதி, சன்னதி சாலை மற்றும் யானைப்பாதையில் 11 இடங்களில் பக்தர்களை நிறுத்தி குழுவாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீஸ் சிறப்பு கட்டுப்பாட்டு அறை, பழனியாண்டவர் கலைக்கல்லூரிக்கு மாற்றப்படுகிறது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு புதுதாராபுரம் சாலை, இடும்பன்குளம் ஆகிய பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் புனிதநீராடும் இடும்பன்குளம், சண்முகாநதியில் ரப்பர் படகுடன் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களை மீட்டு, சிகிச்சைக்கு அழைத்து செல்ல தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தைப்பூச திருவிழா பாதுகாப்புக்கு தென்மாவட்டங்களை சேர்ந்த 1,700 சட்டம்-ஒழுங்கு போலீசார், 300 பெண் போலீசார், 300 போக்குவரத்து போலீசார், 600 ஆயுதப்படை போலீசார், 17 குற்றத்தடுப்பு போலீஸ் படையினர், வெடிகுண்டுகளை கண்டறியும் 20 குழுவினர், 30 வீடியோகிராபர்கள், 11 சிறப்பு போலீஸ் படையினர் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×