search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புத்தர்
    X
    புத்தர்

    அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது- ஆன்மிக கதை

    கலங்கியிருக்கும் நீரைப்போலவே, குழப்பத்தில் இருக்கும் மனதால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    புத்தர் தன்னுடைய சீடர்கள் சிலருடன், ஒரு ஊருக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். நெடுந்தூரப் பயணம் அது. உச்சிப் பொழுது, வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு பெரிய ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருந்தது.

    அதனால் அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியில் ஓய்வெடுத்துவிட்டு வெயில் குறைந்ததும் ஆற்றைக் கடந்து அந்தக் கரையில் உள்ள ஊருக்குச் செல்லலாம் என்று புத்தர் முடிவு செய்தார். அதன்படி புத்தரும், அவரது சீடர்களுக்கு ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

    நீண்ட பயணத்தினாலும், வெப்பத்தினாலும் புத்தருக்கு நீர் தாகம் எடுத்தது. உடனே ஒரு சீடரிடம், ஆற்றில் இருந்து குடுவையில் தண்ணீர் எடுத்துவரும்படி கூறினார். உடனே அவசர அவசரமாக ஓடிச் சென்ற ஒரு சீடர், தண்ணீரை குடுவையில் எடுக்கும்போதுதான் கவனித்தார். அந்த நீர் மிகவும் கலங்கிப்போய் இருந்தது. எனவே தண்ணீர் எடுக்காமல் அங்கிருந்து திரும்பி வந்தவர் புத்தரிடம், “குருவே.. அந்த ஆற்றின் நீர் குடிப்பதற்கு ஏதுவானதாக இல்லை” என்று தெரிவித்தார்.

    புத்தரோ, “என்ன சொல்கிறாய்.. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை.. நீ சற்று ஓய்வெடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து போய் நீர் எடுத்துவா” என்றார்.

    அப்போது அந்த சீடனுக்குள் ஒரு சந்தேகம். ‘குரு இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார் என்றால், நாம்தான் சரியாக கவனிக்காமல் வந்துவிட்டோம் போல் இருக்கிறது. எனவே உடனடியாக மீண்டும் சென்று தண்ணீரை எடுத்து வந்துவிடுவோம்’ என்று நினைத்தபடியே உடனடியாக சென்று ஆற்று நீரை எடுக்கக் குனிந்தார்.

    இப்போதும் அந்த நீர் கலங்கிப்போய் தான் இருந்தது. சீடனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் புத்தரிடம் வந்தவர், “குருவே.. நீங்கள் சொல்லியதால் மீண்டும் சென்றேன். ஆனால் இந்த ஆற்றின் நீர் அருந்துவதற்கு தகுந்ததாக இல்லை” என்றார்.

    “நான்தான் உன்னை சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, பின்னர் சென்று தண்ணீர் எடுத்துவா என்றேனே.. நீ எதற்காக உடனடியாகச் சென்றாய். சரி ஒன்றும் பிரச்சினையில்லை. நீ சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, தாமதமாகச் சென்று தண்ணீர் எடுத்துவா” என்றார்.

    குழப்பத்திலேயே மரத்தடியில் படுத்து சற்று ஓய்வெடுத்த அந்த சீடன், புத்தர் சொன்னதுபோலவே சிறிது நேரம் கழித்துச் சென்று தண்ணீர் எடுக்கப்போனான். இப்போது ஆற்றின் நீர் மிகவும் தெளிவாக இருந்தது. அதில் இருந்து குடுவையில் தண்ணீர் எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தார். அதை வாங்கி தாகம் தீர அருந்தினார், புத்தர்.

    அப்போது அந்த சீடர், தனக்கான சந்தேகத்தைக் கேட்டார். “நான் முதலில் இரண்டுமுறை சென்றபோது கலங்கிப்போய் இருந்த ஆற்றின் நீர், இப்போது எப்படி தெளிந்தது?” என்று புத்தரிடமே கேட்டார்.

    அதற்கு புத்தர், “நாம் வந்த அந்த நேரத்தில்தான் ஒரு மாட்டு வண்டி இந்த ஆற்றினைக் கடந்து சென்றிருந்தது. அதனால்தான் ஆற்றின் நீர் கலங்கிப்போய் இருந்தது. அதனால்தான் உன்னை சற்று நேரம் கழித்து போய் தண்ணீர் எடுத்துவா என்று கூறினேன். நான் தண்ணீர் வேண்டும் என்று கேட்டதும் அவசரத்திலும், பதற்றத்திலும் நீர் எடுக்கச் சென்றதால், உன்னால் இந்த உண்மையை உணரமுடியவில்லை. கலங்கியிருக்கும் நீரைப்போலவே, குழப்பத்தில் இருக்கும் மனதால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. அதனால்தான் எதனால் நீர் கலங்கியிருக்கிறது என்ற உண்மையை உன்னால் உணர முடியவில்லை” என்று விளக்கினார்.

    பின்னர் தன்னுடைய அனைத்து சீடர்களுக்குமாக ஒரு உபதேசத்தை வழங்கினார். நீங்கள் அனைவரும் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆற்றின் நீரைப்போலத்தான் உங்கள் மனமும். அந்த மனமானது குழப்பத்தில் இருக்கும்போது, அதனை அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். சிறிது நேரம் சென்றதும், அது தானாகவே தெளிவடைந்துவிடும். மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியது, சிறிது நேரம் பொறுமையாக இருக்க வேண்டும் அவ்வளவே. அந்த கால அவகாசத்திலேயே மனது அமைதியடைந்துவிடும். பின்னர் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும். பொறுமையே மனதைப் பக்குவப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால், பிரார்த்தனைகளை விடவும், மிக உயர்ந்தது பொறுமைதான்” என்றார்.
    Next Story
    ×