search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தபோது   எடுத்த படம்.
    X
    வழுக்குமரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவிலில் உறியடி திருவிழா

    ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி திருவிழா நடந்தது.
    கன்னிவாடியை அடுத்த ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் கோபிநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமி வீதி உலா வந்தது. கட்டசின்னாம்பட்டி, எல்லைப்பட்டி, ஏர்ணம்பட்டி, ரெட்டியார்சத்திரம், முத்துராம்பட்டி, குளத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, ராமலிங்கம்பட்டி, தோப்புபட்டி, எஸ்.வாடிப்பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களில் சுவாமி வீதி உலா நடந்தது.

    விழாவையொட்டி 3-வது நாளான நேற்று கோபிநாத சுவாமி கோவிலின் உப கோவிலான கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் பெருமாள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், பைரவர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, வழுக்கு மரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் மைதானத்தில் வழுக்கு மரம் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. ரெட்டியார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட இடங்களை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் வழுக்கு மரம் ஏறினர். இதில் வேலாம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் 40 பேர் கொண்ட குழுவினர், வழுக்குமரத்தில் ஏறி அதில் இருந்த பணமுடிப்பு மற்றும் வேட்டி, துண்டு, பிரசாதம் ஆகியவற்றை எடுத்தனர்.

    இதேபோல் விழாவின் முக்கிய நிகழ்வான உறியடி திருவிழா, நேற்று மாலை கதிர்நரசிங்க பெருமாள் கோவில் மைதானத்தில் நடந்தது. இதனை கோவில் செயல் அலுவலர் கணபதி முருகன், பரம்பரை அறங்காவலர்கள் கோபிநாத், கிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி 21 கலயங்களில் தயிர் நிரப்பப்பட்டு பண முடிப்பு, வேட்டி-துண்டு, பிரசாதங்கள் வைக்கப்பட்டன. இதில் ராமலிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் உறி இழுத்து அடித்தனர்.

    உறியடித்திருவிழாவை, சிறப்பு அலங்காரத்தில் கோபிநாத சுவாமி உற்சவ மூர்த்தி கண்டுகளித்தார். பக்தர்களும் பரவத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ஜெயராம், கணேஷ்பிரபு, மனோகரன், எல்லை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×