என் மலர்

  ஆன்மிகம்

  நன்றிக் கடனாக உருவான அவதாரம்
  X

  நன்றிக் கடனாக உருவான அவதாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமாலின் மற்ற அவதாரங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை. ஆனால் பலராம அவதாரம், அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது.
  விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம், பலராம அவதாரம். இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. திருமாலின் மற்ற அவதாரங்கள், வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை. ஆனால் பலராம அவதாரம், அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது.

  வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து, வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம். தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கவேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம். இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம். தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம். மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க எடுக்கப்பட்டது வாமன அவதாரம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உன்னத தத்துவத்தை உணர்த்த எடுக்கப்பட்டது ராம அவதாரம். தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இருப்பினும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்டது கிருஷ்ண அவதாரம். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுக்கு உற்ற துணையாக இருந்தவர்களை, உன்னதமாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரமே, பலராமர் அவதாரம் ஆகும்.

  திருமாலின் அவதார வரிசை பற்றிய சந்தேகம் நாரதருக்கு ஏற்பட்டது. அப்போது திருமால் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தார். நேராக அவரிடம் சென்ற நாரதர், “இறைவா! இந்த கிருஷ்ண அவதாரம் உங்களுடைய எத்தனையாவது அவதாரம்?” என்று கேட்டார்.

  அதற்கு கிருஷ்ணர், “இது என்னுடைய ஒன்பதாவது அவதாரம்” என்று பதிலளித்தார்.

  “அப்படியானால் எட்டாவது அவதாரம் எது?” என்ற நாரதரின் கேள்விக்கு, “இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்துள்ள பலராமன்தான், என்னுடைய எட்டாவது அவதாரம்” என்றார்.

  குழப்பம் அடைந்த நாரதர், “எப்படி பெருமாளே! தங்களின் படுக்கையாக இருக்கிற ஆதிஷேசன் என்ற நாகம்தானே பலராமனாக பிறந்துள்ளது. அப்படியிருக்க, பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வர முடியும்?” என்று கேட்டார்.

  “நாரதரே, எனது ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்து சதா சர்வகாலமும், ‘அண்ணா.. அண்ணா..’ என்று என் காலையே பிடித்து கொண்டிருந்த லட்சுமணனுக்கு, நான் இதுவரை எதுவுமே செய்யவில்லையே. அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஆதிசேஷன் மூலமாக எனது அண்ணனாக அவனை படைத்து, தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வதோடு, எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்துள்ளேன்” என்றார் பரந்தாமன்.

  இப்படி திருமாலே உருகி உருவாக்கிய உன்னத அவதாரமே, பலராமர் அவதாரம்.

  கலப்பையை ஆயதமாகக் கொண்ட பலராமர், உறவுமுறையில் கிருஷ்ணரின் சகோதரர், கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் உதித்தவர். இவரை ‘பலதேவன்’, ‘பலபுத்திரன்’, ‘கதாயுதன்’ என்று போற்றுவர். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. பலராமரின் தங்கை பெயர் சுபத்திரை.

  பலராமர் பிறந்தபோது, அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர், சடங்குகள் செய்து ராமன் என்று பெயரிட்டார். மேலும் அந்தக் குழந்தை மிகவும் பலசாலியாக இருந்ததால், ‘பலராமன்’ என்றும் அழைக்கலாம் என்றார்.

  ரோகிணியின் வயிற்றில் உதித்த பலராமனும், தேவகி வயிற்றில் உதித்த கண்ணனும் இணை பிரியா சகோதரர்கள் ஆயினர். பிருந்தாவனத்திலும், ஆயர்பாடியிலும் இவர்கள் நடத்திய திருவிளையாடல் கொஞ்ச நஞ்சமல்ல. கோவர்த்தனகிரியில் இவர்கள் மாடுமேய்க்கும் காலத்தில், மனித மாமிசத்தை உண்ணும் வழக்கம் கொண்ட கழுதை வடிவிலான தேனுகன் என்பவனையும், வில்வ மரத்தடியின் கீழ் வில்வ பழத்தால் பந்தாடிய காலத்தில் பிரலம்பன் என்பவனையும், நரகாசுரனின் வானரத் தலைவனான துவிதனின் சகோதரன் மயிந்தன் என்பவனையும் இருவரும் சேர்ந்தே அழித்தனர்.

  மகாபாரதத்தில் பலராமர்

  துரியோதனனுக்கு லட்சுமளை என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணம் செய்ய சுயம்வரம் ஏற்பாடு செய்தான், துரியோதனன். சுயம்வரத்திற்கு வந்த சாம்பன், லட்சுமளையை தூக்கிச் சென்றான். சாம்பன் வேறுயாருமல்ல, கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த மகன்தான். தன் மகளை சாம்பன் தூக்கிச் சென்றதும், துரியோதனன் தன் படையோடு வந்து சாம்பனுடன் பேரிட்டான். அவர்களை எதிர்த்து நின்றான் சாம்பன். இருப்பினும் அந்த படையில் பலம் வாய்ந்த பீஷ்மரும், துரோணரும் இருந்ததால், சாம்பன் சிறைபடுத்தப்பட்டான்.

  இதுபற்றி அறிந்ததும் பலராமர், அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தார். “துரியோதனா! நீ செய்ததில் நியாயம் இல்லை. தனி ஒருவனாக போராடிய சாம்பனை, படையோடு சென்று சிறைபடுத்தியிருக்கிறாய். நாங்கள் உன்னுடைய உறவினர் என்பது மறந்து போயிற்றா? ஏன் எப்பொழுது பார்த்தாலும் எங்களோடு பகைமை பாராட்டிக் கொண்டே இருக்கிறாய்? சாம்பனை விடுவித்து, உன்னுடைய மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடு” என்றார்.

  ஆனால் அதை கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன், பலராமரையும் அவர் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமருக்குக் கோபம் பீறிட்டது.

  “உங்களோடு சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்ற அவசியமே எனக்கு இல்லை. கணப் பொழுதில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன்” என்று கூறி, தன் ஆயுதமான கலப்பையை எடுத்து தரையில் அடித்தார்.

  அடுத்த நொடி அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நதியில், அந்த நகரமே மூழ்கிப் போகுமோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. உடனே துரியோதனன், பலராமர் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சு மளையை, சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான்.

  அதன்பிறகு, தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமர் கொண்டுவந்து நிலைப்படுத்தினார்.
  Next Story
  ×