search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகர் அழகர்மலை திரும்பினார்
    X

    அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகர் அழகர்மலை திரும்பினார்

    கள்ளழகர் அதிர்வேட்டுகள் முழங்க அழகர்கோவில் சேர்ந்தார். திருஷ்டி பூசணிக்காய் சுற்றி பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.
    மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கடந்த 17-ந்தேதி, அழகர்மலையில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். சிகர நிகழ்ச்சியாக தங்கக்குதிரை வாகனத்தில் கடந்த 19-ந்தேதி வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 20-ந்தேதி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும், 21-ந்தேதி இரவு பூப்பல்லக்கு விழாவும் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பன்திருப்பதி உள்ளிட்ட மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அப்பன்திருப்பதியில் விடிய, விடிய திருவிழா நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று பகல் 11 மணி அளவில் அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதிக்கு கள்ளழகர், தங்கப்பல்லக்கில் திரும்பினார். அங்கு 18-ம்படி கருப்பணசாமி கோவில் முன்பு அழகருக்கு சிறப்பு பூஜைகளுடன் வையாழி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் அதிர்வேட்டுகள், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடனும் கோவில் யானை சுந்தரவள்ளி முன்னால் செல்ல கள்ளழகர் தங்கப்பல்லக்கில் வந்தார். அங்கு “கோவிந்தா... கோவிந்தா...” என கோஷத்துடன் பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி அழகரை சுற்றிவந்து திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து அழகர் திருக்கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார்.

    இந்த விழாவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு 27 உண்டியல் பெட்டிகள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக மதுரைக்கு சென்றுவந்தன. மொத்தம் 451 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த தானியங்களை பாரம்பரிய வழக்கப்படி நெற்களஞ்சியத்தில் செலுத்தினர்.

    இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
    Next Story
    ×