search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்
    X

    பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென்தமிழக குடவரை கோவிலில்களில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பான விகாரி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மூலவர் சன்னதி அருகில் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். காலை 10 மணியளவில் வெள்ளி பல்லக்கில் கோவிலில் இருந்து நாதஸ்வரம் முழங்க அங்குச தேவரும் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள குள படித்துறைக்கு வந்தனர். அங்கு அங்குச தேவருக்கும் அஸ்திரதேவருக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்று பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் கோவில் குளத்தில் சிவாச்சாரியாரால் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அன்னதானமும் நடந்தது.

    நேற்று பகல் முழுவதும் கோவில் நடை சாத்தப்படாமல் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மாலை விநாயகர், சந்திரசேகரர், கவுரியம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் கோவில் பிரகார வலம் வந்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி புத்தாண்டு பஞ்சாங்கமும் வாசிக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அமராவதிபுதூர் ராம.அண்ணாமலைச் செட்டியார், தேவகோட்டை எம்.நாகப்பன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×